சீனப் பொருளாதார வளர்ச்சியின் உண்மைகளும் பொய்களும்

Posted: May 7, 2013 in சீனா, பொருளாதாரம்

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், உலகில் இரண்டாவது பெரிய பொருளாதாரம், உலகில் அதிக எற்றுமதி செய்யும் பொருளாதாரம், உலகின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி செய்யும் பொருளாதாரம், உலகில் அதிக அளவு எரிபொருள் கொள்வனவு செய்யும் பொருளாதாரம், 2050இல் உலகில் முதல்தரமாகப் போகும் பொருளாதாரம் என்றேல்லாம் சீனப் பொருளாதரத்திற்கு நல்ல பெயர் உண்டு.

சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப தனது படைத் துறையையும் வளர்த்து வருவதுடன் தனக்கென்று சில நாடுகளை வளைத்துப் போடுவதிலும் முயன்று வருகிறது. மனித உரிமைப் பிரச்சனை, புவிசார் அரசியல் நிலைமை, தீவிரவாதம் போன்றவற்றிற்காக மேற்கு நாடுகள் சற்று விலகி இருக்கும் ஈரான், சிம்பாப்வே, பாலஸ்த்தீனம் போன்ற நாடுகளுடன் சீனா தனது நட்புறவை வளர்த்து வருகிறது.

பொதுவுடமைக் கொள்கையில் இருந்து விலகி முதலாளைத்துவப் பொருளாதாரத்தை நோக்கி சீனா நகர்ந்து உலக வர்த்தகத்தில் தீவிர பங்காளியாக மாறியதில் இருந்து சீனப் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியக் கண்டது. 1978இல் சீனாவின் மொத்த உற்பத்தி(GDP) 214பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2012இல் அது எட்டு மடங்காகி 8.3ரில்லியன் டாலர்களானது.

சீனா தனது பொருளாதார வளர்ச்சியில் இலக்கை 8 வி்ழுக்காடாக நிர்ணயித்துள்ளது. இப்படிப்பட்ட ஓர் உயர் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து பேணாவிடில் சீனாவில் வேலையில்லாப் பிரச்சனை தலை தூக்கி அங்கு பெரும் உள்நாட்டுப் போர் நிகழும் என்று சீன ஆட்சியாளர்க்ள் அறிவர்.

2012இல் சீனாவால் தனது  பொருளாதார வளர்ச்சியின் இலக்கை எட்ட முடியவில்லை. 2012இல் சீனப் பொருளாதார வளர்ச்சி  7.4 விழுக்காடு மட்டுமே. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு நல்ல வளர்ச்சிதான். 2012இல் பொருளாதார வளர்ச்சி: இந்தியா – 4.5, ஜெர்மனி – 0.10, ஜப்பான்  – .50, பிரான்ஸ் – -0.30(தேய்வு), ஐக்கிய இராச்சியம் – 0.60, ஐக்கிய அமெரிக்கா – 1.80. 2013 முதலாம் காலாண்டிலும் சீனப் பொருளாதாரம் 8 விழுக்காடு வளர்ச்சியை அடையவில்லை. 2013 ஏப்ரல் மாதமும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த இலக்கை அடையாது என கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் சுட்டிக்காட்டுகிறது.

சீனப் பொருளாதாரத்தின் பலவீனங்கள்.
1. ஏற்றுமதியிலும் வெளியாருக்கான உற்பத்தியிலும் பெரிதும் தங்கி இருக்கிறது.
சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதியிலேயே பெரிதும் தங்கி இருக்கிறது. அதன் உள்ளூர் பொருளாதாரம் பலவீனம் அடைந்த நிலையிலேயே இருக்கிறது. சீனத் தொழிலாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்திற்கு உற்பத்தியாக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்து சீனா தனது பொருளாதாரவளர்ச்சியை எட்டுகிறது. சீனாவின் உற்பத்திப் பொருட்கள் சீனாவால் கண்டுபிடிக்கப்பட்டவையோ அல்லது உருவாக்கப்பட்டவையோ அல்ல. ஏற்கனவே வேறு நாடுகளில் கண்டிபிடிக்கப்பட்ட பொருள்களை சீனா குறைந்த செலவில் உற்பத்தி செய்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமது பொருட்களை சீனாவில் உற்பத்தி செய்கின்றன. தற்போது இத்துறையில் சீனாவிற்கு பிலிப்பைன்ஸ், வியட்னாம், பங்களாதேசம் போன்ற பல நாடுகள் போட்டியாக உருவாகி வருகின்றன. சீனாவின் தொழிலாளர்களுக்கான ஊதியம் அதிகரித்து வருவது நிலைமையை மேலும் மோசமாக்கிறது. அத்துடன் சீனத் தொழிலாளர்கள் அதிக ஊதியம் கேட்டு வருகின்றனர்.

2. ஆராய்ச்சி அபிவிருத்தி உதவித் தொகை தவறாகப் பயன்படுத்தப்ப்டுகிறது.
சீன அரசு உயர் கல்வி நிறுவங்களுக்கு ஆராய்ச்சி அபிவிருத்திக்கு வழங்கும் உதவித் தொகையை அவை தவறாகப் பயன்படுத்துகின்றன. இதனால் உலகச் சந்தையில் தனது சொந்த கண்டுபிடிப்புக்களை அறிமுகம் செய்வதில் சினா பின் தங்கி இருக்கிறது.

3. சீன அரசின் பல உள்நாட்டு முதலீடுகள் தோல்வியில் முடிவடைகின்றன.
தனது உள்நாட்டுப் பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்குடன் பல முதலீடுகளைச் செய்கின்றது. உலகின் மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி அணை, உலகின் வேகமிக்க பெரும் கணனித் தொகுதிகள், கடுகதி தொடரூந்துச் சேவை ஆகியவற்றில் சீனா வெற்றியடைந்தாலும் வேறுபல உள்ளூராட்சி அமைப்புக்களில் சீன அரசு செய்யும் பல முதலீடுகள் தோல்வியில் முடைவடைவதால் நிக்ர விளைவு தோல்வியாகவே இருக்கிறது.

4. சீனா ஒரு பொருளாதார ரீதியில் பின் தங்கிய ஒரு நாடே. 
சீனாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தியும் அதன் வளர்ச்சியும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெரிதாக இருக்கிறது. ஆனால் தன் நபர் வருமானம் என்று பார்க்கும் போது சீனாவின் நிலை மிகவும் மோசமானதே. தனிநபர் வருமானப் பட்டியலில்: 
ஐக்கிய அமெரிக்கா 12வது இடத்தில் $49000.
ஜேர்மனி ……………….27வது இடத்தில் $38,400
ஐக்கிய இராச்சியம் 34வது இடத்தில் $36,000 
பிரான்ஸ் ………………36வது இடத்தில் $35,600
ஜப்பான் ………………….37வது இடத்தில் $35,200 
சீனா………………………..164வது இடத்தில் $8,500.

இதில் இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபகரமானது 164இடத்தில் $3700.

5. ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
சீனா பொருளாதாரத்தில் முன்னேறினாலும் அதன் சமுதாய மாற்றம் மக்களுக்கு நன்மை பயப்பதாக இல்லை. ஒரு நல்ல மருத்துவ வசதி பெறவோ ஒரு நல்ல கல்வியைப் பிள்ளைகளுக்குப் பெறவோ ஒரு சீனக் குடிமகன் பெரும் பணத்தை கையூட்டாகக் கொடுக்க வேண்டிய பரிதாபகரமன நிலையில் உள்ளான். சீனாவில் பல மில்லியன் அதிபதிகளை அதன் பொருளாதார வளர்ச்சி உருவாக்கினாலும் அதன சமூக நிலை மோசமாகிக் கொண்டே போகிறது.சீன அரசின் சமூக நலக் கொடுப்பனவுகள் மிகவும் குறைவானதே. பல முதியோர் ஓய்வு ஊதியம் எதுவும் இன்றித் துயரப்படுகின்றனர்.

6. பாதகமான மக்கட்தொகைக் கட்டமைப்பு
தற்போது பல மேற்கு நாடுகளைப் பாதித்துள்ள மக்கள் தொகைக் கட்டமைப்பு இப்போது சீனாவையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. சீனாவில் தொடர்ந்து பல ஆண்டுகளாகச் செய்யப் பட்ட குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் தற்போது சீனாவின் மக்கள் தொகையில் இளையோரின் தொகை குறைந்து வருகிறது. முதியோரின் தொகை அதிகரித்து வருகிறது. இந்த வகையில் இந்தியா பலமிக்க நாடாக இருக்கிறது.

7. நம்ப முடியாத சீனத் தகவல்கள்
ஆட்சியாளர்கள் தமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எப்போதும் உயர்த்திக் காட்டுவதுண்டு. கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலும் யூரோ நாணயக் கட்டமைப்பிலும் இணைவதற்கு பிழையான பொருளாதரப் புள்ளிவிபரத் தகவல்களை வேண்டுமென்றே தயாரித்தது என நம்பப்படுகிறது. இது யூரோ வலய நாடுகளின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணமாக அமைந்தது. சீனாவின் பொருளாதரம் தொடர்பான புள்ளி விபரங்கள் ஆட்சியாளர்களில் செல்வாக்கை மக்கள் மத்தியில் தக்க வைப்பதற்காக திரித்துக் கூறப்படுகின்றன என்ற குற்றச் சாட்டு உண்டு. புள்ளிவிபரங்களில் செய்யப்படும் பல மோசடிகள் தொடர்பான செய்திகள் அவ்வப்போது கசிவதுண்டு.

8. உலகின் மோசமான சூழல் மாசு
சீன ஆறுகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆறுகள் மாசடைந்துள்ளன. காற்று மாசுச் சுட்டெண் சீனாவில் 469 ஆக இருக்கிறது. இது 301இற்கு மேல் இருப்பது ஆபத்தானது. சீன அரசின் கணிப்பின்படி சீனாவின் 113 நகரங்களில் மூன்றில் இரண்டு பங்கு நகரங்களில் காற்று மாசடைந்துள்ளது.

9. வருமானப் பங்கீட்டில் சமமின்மை
அதிக வளர்ச்சியுடைய பெரிய பொருளாதாரமான சீனாவில் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது.

10. நிதி நிறுவனங்கள் வளரவில்லை
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் அந்த நாட்டு நிதி நிறுவனங்களும் வளர்ந்து செல்ல வேண்டும். அமெரிக்காவின் நிதிச் சந்தை, பிரித்தானியாவின் வங்கிக் கட்டமைப்பு போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் சீன நிதி நிறுவனங்கள் இன்னும் பாதாளத்தில்தால் இருக்கின்றன. இதனால் மூலதனங்கள் திறன்மிக்க துறைகளில் முதலீடு செய்யப்படுவதில்லை.

மோசமான வருமானப் பங்கிடு, மாசடையும் சூழல், பெருகும் ஊழல் சமூக ஒருக்கிணைப்பின்மை ஆகியவற்றால் சீனப் பொருளாதார வளர்ச்சியை ஒரு தரங்குறைந்த வளர்ச்சி என்கின்றனர் சமூகப் பொருளாதார வல்லுனர்கள். தற்போது தமது பொருளாதார வளர்ச்சிக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் பல நாடுகள் நம்பியிருக்கின்றன. சில தங்கியிருக்கின்றன. இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த பல மேற்கு நாட்டு ஆட்சித் தலைவர்கள் சீனாவிற்கும் இந்தியாவிற்கு அடிக்கடி பயணம் மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞசலாம்.

Comments
  1. AKSHAYAN says:

    பிரயோசனமான ஒரு கட்டுரை அண்ணா. இதனை எனது இணைத்தளதத்தில் மீள்பிரசுரம் செய்யமுடியுமா? ஏனெனில் இந்தக் கட்டுரையானது புவியியல் மாணவர்களுக்கும், பொருளியல் மாணவர்களுக்கும் பிரயோசனமானதாக இருக்கும்.எனது இணையத்தள முகவரி:-www.thavasilearningcity.blogspot.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.