சீனாவின் தொற்று நோயும் புவிசார் அரசியலும்

Posted: February 17, 2020 in Uncategorized

சீனாவில் உருவாகி உலகின் பல பாகங்களுக்கும் பரவிவரும் கொரோனா நச்சுக்கிருமி உலக அரசியலுடன் பிணைந்துள்ளது. அந்த நச்சுக் கிருமி தொடர்பான சரியான விஞ்ஞானப் புரிதல் இரண்டு மாதங்களாக கிடைப்பதற்கு அரிதாக இருக்கின்றது. அதன் தோற்றம் மற்றும் பரவல் தொடர்பான உண்மையான செய்திகளை அறிவது அதிலும் அரிதாக இருக்கின்றது.

 

தொற்று நோயும் அரசுறவுகளும்

நாடுகளுக்கு இடையிலான உறவுகள், உலகப் பொருளாதாரம், உலகப் போக்கு வரத்து போன்றவற்றில் இந்த தொற்று நோயின் தாக்கங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது பதக்கப் பட்டியல் நாள்தோறும் வெளிவிடப்படுவது போல் ஒவ்வொரு நாட்டிலும் பாதிக்கப்பட்டவரக்ளினதும் கொல்லப் பட்டவர்களினதும் பட்டியல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சீனாவின் தொற்று நோயின் மையப்புள்ளியான வுஹான் நகரில் இருந்து பல அரசுறவியலாளர்களும் மாணவர்களும் வெளியேறியுள்ளனர். கிழக்கு ஐரோப்பாவின் போல்ரிக் பிராந்தியத்தில் உள்ள செய்தி வலைத்தளங்கள் ஐந்து இணையவெளித் திருடர்களால் ஊடுருவப்பட்டு லித்துவெனியாவில் உள்ள அமெரிக்கப் படையினருக்கு கொரோனா தொற்று நோய் பிடித்துள்ளதாக பொய்யான தகவல்கள் பதியப்பட்டன.

ஆட்சிமுறைமைத் தத்துவம்

கடந்த பத்து ஆண்டுகளாக சீனா தனது பொருளாதார வெற்றிக்கு அதன் ஆட்சிமுறைமை காரணம் எனப் பறைசாற்றி வருகின்றது. மற்ற நாடுகள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சுதந்திரத்தைப் பேணவும் சீனாவின் ஆட்சிமுறைமை உகந்தது என 2017இல் சீன அதிபர் அறிவித்திருந்தார். தொற்று நோய் பற்றிய அறிவும் செய்திகளும் மக்களிடையே பரப்பப்பட்டால்தான் அவர்கள் அது தொடர்பாக கவனமாக இருக்க முடியும். வெளிப்படைத்தன்மையுடன் அரசு செயற்படும் போது மட்டுமே அது சாத்தியம். ஆனால் சீன ஆட்சி முறைமை அதை அனுமதிப்பதில்லை என மேற்கு நாட்டு ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஐநா அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தின் அதிபர் சீன அரசு காத்திரமாகவும் துரிதமாகவும் எடுத்த நடவடிக்கைகளால் தொற்று நோய் பரவும் வேகம் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

நாடுகளிடையேயான உறவும் சமூகப் பிரச்சனையும்

சீனாவில் இருந்த தமது மாணவர்களை இந்தியா, பங்களாதேசம், இலங்கை போன்ற நாடுகள் அரச செலவில் தமது நாடுகளுக்கு திருப்பியழைத்தன. அதை சீனா தன்னை அவமானப் படுத்தும் செயலாகப் பார்த்தது. அதனால் சீனாவுடன் சிறந்த உறவைப் பேணும் பாக்கிஸ்த்தானும் கம்போடியாவும் தமது நாட்டு மாணவர்களை சீனாவிலே இருக்கும் படி பணித்தன. தம்மை பாக்கிஸ்த்தான் அரசு கைவிட்டதாக சீனாவில் உள்ள அதன மாணவர்கள் ஆத்திரப்பட்டனர். தமது அரசின் நடவடிக்கைகளை இந்தியாவுடன் எதற்கும் ஒப்பிட்டுப் பார்ப்பதை பாக்கிஸ்த்தானியர்கள் வழக்கமாகக் கொண்டவர்கள். பாக்கிஸ்த்தான் மாணவர்கள் தமது அரசு தம்மைக் கைவிட்டதாக குற்றம் சாட்டியும் இந்தியாவின் செயலுடன் ஒப்பிட்டும் காணிலிகளை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனார்.

இறைமைக்கு உட்பட்ட ஹொங் கொங் தீவு

சீனாவின் இறைமைக்கு உட்பட்ட ஹொங் கொங் தீவில் உள்ள ஆட்சி முறைமை சீனாவின் ஆட்சி முறைமையிலும் வேறுபட்டது. இரு ஆட்சி முறைமைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் குறைக்க சீன பொதுவுடமைக்கட்சியினர் முயல்கின்றனர். அதற்கு ஹொங் கொங்கில் கடும் எதிர்ப்பு நிலவுகின்றது. சீனாவின் பிடியை தளர்த்த ஹொங் கொங்கில் கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் வேளையில் சீனாவில் கொரோனா நச்சுக்கிருமிப் பிரச்சனை உருவானது. மற்ற நாடுகளைப்போல் சீனவிற்கும் ஹொங் கொங்கிற்கும் இடையில் மக்கள் போக்குவரத்து தடை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. ஆனால் சீனாவின் கைப்பாவையாக இருக்கும் ஹொங் கொங் முதல்வர் சீனாவுடனான எல்லையை மூட மறுத்து வருகின்றார்.

இறைமைக்கு அப்பாற்பட்ட தைவான் தீவு

தனக்கு என ஒரு தனியான ஆட்சிமுறைமையைக் கொண்ட தாய்வான் தீவை சீனா தன்னுடைய நாட்டின் ஒரு மாகாணம் என அடம்பிடிக்கின்றது. சீனாவுடன் மற்ற நாடுகள் அரசுறவுகளைப் பேணுவதை கடுமையாக எதிர்க்கின்றது. எந்த ஓர் உலக அமைப்பிலும் தைவான் உறுப்புரிமை பெறாமல் தடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) கொரோனா நச்சுக் கிருமி தொடர்பாக நடத்திய கூட்டத்தில் தைவானும் பங்கு பெற முயன்றது. ஆனால் அதை சீனா தடுத்துவிட்டது. தைவானின் கோரிக்கையை ஆட்சேபிக்கும் செயலாக பல போர் விமானங்களை சீனா தைவான் வான்பரப்பினுள் பறக்க விட்டது.

உயர்தரத் தலைவராக தன்னை நினைப்பவர்

சீன அதிபர் ஜீ ஜின்பிங் தன்னை ஒரு மிகவும் உயர்தரமான (ultra-competent) தலைவராக சீனாவில் நிலை நிறுத்தியுள்ளார். தனது அதிகாரத்தையும் அவருக்கு முன்பு உள்ள தலைவர்களிலும் பார்க்க மிக அதிகரித்துள்ளார். சீனாவிற்கு உள்ளும் வெளியும் அவர் தொற்று நோய்ப் பிரச்சனையை சரியாகக் கையாளவில்லை என்றவகையில் செய்திகள் பரப்பப்படுகின்றன. மேற்கு நாட்டு ஊடகங்களில் நாளொரு ஆய்வுக் கட்டுரையும் பொழுதொரு செய்தியுமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. பெப்ரவரி 4-ம் திகதி கலிபோர்ணியாவின் சந்தியாகோவில் அமெரிக்காவிற்கான சீனத்தூதுவர் அங்கு வாழும் சீனர்களைச் சந்தித்த போது ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என ஒரு மாணவர் குரல் எழுப்பினார். இது போன்ற குரல்கள் சீனாவில் பல இணையத் தளங்களிலும் எழுந்துள்ளன. ஜீ ஜின்பிங்கின் ஆட்சியில் மிக மோசமான சுகாதார நெருக்கடியாகவும் பொருளாதாரச் சவாலாகவும் கொரோனா நச்சுக்கிருமிப் பிரச்சனை இருக்கின்றது.

பேச்சுரிமையின்மையால் பரவிய தொற்று நோய்

கொரோணாநச்சுக்கிருமியால் கொடிய நோய் உருவாகியுள்ளதாக வுஹான் நகர முதல்வர் சீன நடுவண் அரசின் அதிகாரிகளுக்கு அறிவித்த போது அவர் தனது நகர மக்களை தொற்று நோய் தொடர்பாக எச்சரிக்கை விடுக்காமல் தடுக்கப்பட்டமையால் தொற்று நோய் பரவுவது தடுக்க முடியாமல் போனது. தொற்று நோயை முதலில் அறிந்த மருத்துவர் அது தொடர்பான செய்தியை தனது மருத்துவ நணர்களுடன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டதால் அவர் காவற்றுறையினரால் விசாரிக்கப்பட்டார். அத்துடன் தனிமைப் படுத்தப்பட்டார். இறுதியில் அவரே அந்த நோய்க்குப்பலியானார்.

அரசின் இரும்புபிடி

சீனாவின் அரசு அதிகாரமிக்கது. பொதுவுடமை கட்சிய்க்கு மட்டுமே பொறுப்புக் கூறும் நிலைமை அங்கு உள்ளது. தொற்று நோயால் பீடிக்கப் பட்டிருக்கலாம் என யார் மீதாவது ஐயம் இருந்தால் அவர் உடனடியாக சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றார். தொற்று நோய் இல்லாமல் சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தொற்று நோயால் பலர் பீடிக்கப்படுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. சீன அரசு தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி உல்லாச விடுதிகளை தொற்று நோய்க்கான மருத்துவமனைகளாக மாற்றியுள்ளது.

ஐம்பதாயிரம் பேர் கொழுத்தப்பட்டனராம்

சீனாவில் இருந்து வெளியேறி மேற்கு நாடுகளில் வசித்து வரும் சீனாவைச் சேர்ந்த பல பில்லியன் டொலர்கள் சொத்துக்களைக் கொண்ட குவோ வென்குய் சீனாவில் பதைனைந்து இலட்சம் பேருக்கு மேற்பட்டவர்களை கொரோனா தொற்று நோய் பிடித்துள்ளதாகவும் அந்த நோயால் இறந்த ஐம்பதினாயிரம் பேரை சீனா கொழுத்தி எரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐயங்கள் அதிகமானால் ஊகங்கள் நிறையும்

கொரோனாநச்சுக் கிருமியின் உருவாக்க தொடர்பாக பல ஐயங்கள் நிலவும் போது பல ஊகங்களும் நிலவுகின்றன. முதலில் அது கடலுணவில் இருந்து பரவியது எனச் சொல்லப்பட்டது. பின்னர் அது பொகோலின் என்னும் ஒரு விலங்கின் இறைச்சியை உண்டதால் வந்தது எனச் சொல்லப்படுகின்றது. இவை ஐயங்கள் மட்டுமே எந்த ஒரு உலக உயர்தரப் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் கூட இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. ஆனால் சீனா உயிரியல் படைக்கலன்களாக உருவாக்கிய தொற்று நோய்க்கிருமியாகிய கொரோனா தவறுதலாக நடந்த குழாய் வெடிப்பால் பரவத் தொடங்கி விட்டது எனவும் செய்திகள் வெளிவருகின்றன.

பொருளாதாரப் பாதிப்பு

சீனப் புத்தாண்டுக்காக பல உற்பத்தி நிறுவனங்கள் இரண்டு வாரங்கள் மூடப்படுவது வழக்கம். தொற்று நோயால் இந்த ஆண்டு அது நான்கு வாரங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உள்நாட்டுப் போக்குவரத்து கடுமையாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வதும் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. உலகெங்கும் நடக்கவிருந்த பல பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமான உலக மாநாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. போக்கு வரத்து குறைந்துள்ளதாலும் சீனாவில் இருந்து செய்யப்படும் ஏற்றுமதிகள் பாதிக்கப் பட்டுள்ளதாலும் சீனாவில் உற்பத்தி குறைந்துள்ளது. இவற்றால் எரிபொருளுக்கான தேவை குறைந்துள்ளது. அதன் விளைவாக எரிபொருள் விலை குறைந்துள்ளது. இரசியாவின் டாஸ் செய்தி நிறுவனம் இரசியப் பொருளாதாரத்தில் சிறிய பாதிப்பு சீனத் தொற்று நோயால் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. உல்லாசப் பயணத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. வமையாக ஐயாயிரம் டொலர் போகும் உல்லாச விடுதி அறை வாடகை இப்போது ஆயிரம் டொலர்களாக உள்ளது. சீனத் தொற்று நோயால் உலக விநியோக வலைப்பின்னலில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. சீனத் தொற்று நோயால் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை அளவீடு செய்ய முடியாமல் பொருளாதார நிபுணர்களும் முதலீட்டாளர்களும் திண்றுகின்றனர். சீனாவின் பொருளாதாரம் 2020இல் ஆறு விழுக்காடு வளரும் என பன்னாட்டு நாணய நிதியம் முன்பு எதிர்வு கூறியிருந்தது. ஆனால் S&P என்ற பொருளாதார மதிப்பீட்டு நிறுவனம் தொற்று நோயால் அது ஐந்து விழுக்காடாக குறையும் எனச் சொல்கின்றது. 2003-ம் ஆண்டு சார்ஸ் நச்சுக்கிருமி சீனாவைத் தாக்கிய போது உலகப் பொருளாதார உற்பத்தில் சீனாவின் பங்கு 4% மட்டுமே ஆனால் தற்போது அது 17%ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் பொருளாதாரம் அப்படிப் பாதிக்கப்படும் போது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 0.4% முதல் 0.5% வரை குறைக்கப்படும் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது. அதன் தொடர்ச்சியாக உலக உற்பத்தி பாதிக்கப்படும். ஆனால் சீனப் பொருளாதார நிபுணர்களின் கருத்து வேறு விதமாக உள்ளது. சீனாவின் Chinese Academy of Social Sciences (CASS)இன் பொருளாதார நிபுணர்கள் சீனாவின் பொருளாதாரம் எதிர்பார்த்த இலக்கை 2020இல் எட்டும் என எதிர்வு கூறியுள்ளனர்.

கொரோணா தொற்று நோய் பரவும் வேகம் தணிந்துள்ளது என்பது மட்டுமே ஆறுதலான செய்தியாக இருக்கின்றது.

 

 

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.