tpp_chinaஜி-20 நாடுகளின் மாநாட்டுக்குச் சென்ற இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன், இந்தியத்  தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, பிரித்தானியத் தலைமை அமைச்சர் தெரெசா மே ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பைச் செய்த சீன அரசு பராக் ஒபாமாவிற்கு திட்டமிட்டு அவமரியாதை செய்தது. ஒபாமாவின் விமானம் தரை இறங்கியவுடன் அவர் விமானத்தில் இருந்து இறங்குவதற்கான தானியங்கிப் படி வழங்கப் படவில்லை. அவர் வழமைக்கு மாறாக விமானத்தின் உள்ளிருந்து இறக்கப் பட்ட படியால் இறங்க வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல ஒபமாவை வரவேற்க சீனாவிற்கு ஏற்கனவே பேச்சு வார்த்தைக்கு எனச் சென்றிருந்த அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சூசான் றைஸ் ஒபாமாவிற்கு அண்மையில் செல்லாமல் அநாகரீகமான முறையில் தடுக்கப்பட்டார். ஒபாமாவின் வருகைக் காணச் சென்றிந்த அமெரிக்க ஊடகவியலாளர்களுடன் சீனா அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டனர். ஊடகவியலாளர்களுக்கு இது எங்கள் நாடு இது எங்கள் விமான நிலையம் என சீன அதிகாரிகள் அவர்கள் மீது சீறினர். சீனா கிழக்குச் சீனக் கடல், தென் சீனக் கடல், பசுபிக் பிராந்தியம் ஆகியவற்றில் செய்ய முனையும் விரிவாக்கத்திற்கு பராக் ஒபாமாவின் நிர்வாகம் எந்த அளவு தடை விதிக்கின்றது என்பதையும் அதனால் சீனா எந்த அளவு ஆத்திரம் அடைந்துள்ளது என்பதையும் இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகின்றது.

பசுபிக் மாக்கடலின் மேற்குக் கரை

பசுபிக் மாக்கடல் கிழக்கே அமெரிக்கக் கண்டத்தையும், மேற்கே ஆசியக் கண்டத்தையும் ஒஸ்ரேலியாவையும் எல்லைகளாகக் கொண்டது. உலக எரிபொருள் விநியோகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்து மாக்கடலினூடாக பசுபிக் மாக்கடலுக்குச் செல்கின்றது. உலக வர்த்தகத்தின் 30 விழுக்காடு தென் சீனக் கடலின் ஊடாகச் செல்கின்றது. அதில் 1.2ரில்லியன் டொலர்கள் பெறுமதியான வர்த்தகம் அமெரிக்காவிற்குச் செல்கின்றது.  ஒஸ்ரேலியா, கம்போடியா, சீனா, ஹொங்கொங், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்வான், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகள் பசுபிக் வளைய நாடுகளாகும். ஜப்பானும், இரசியாவின் மேற்குப் பிராந்தியம்மு பசுபிக் மாக்கடலுடன் தொடர்பு பட்டிருப்பதால் அவையும் பசுபிக் நாடுகளாகக் கருதப்படக் கூடியவையே, தென் கொரியாவும் இவ்வாறே பசுபிக் நாடாகும். சீனாவைப் பொறுத்தவரை தனது கடற்பரப்பு அதிகரிப்பிற்கும் பிராந்திய வர்த்தகத்திற்கும் இடையில் தடுமாறுகின்றது. சீனாவின் முன்னாள் தலைமை அமைச்சரும் சீனப் பொருளாதார சீர்திருத்தத்தின் முன்னோடியுமான டெங் ஜியாபிங் (Deng Xiaoping) அவர்களின் முக்கிய கொள்கையாக மற்ற நாடுகளுடன் மோதாமல் இருத்தல் என்பது இருந்தது. இதில் இருந்து எப்படி விலகுவது என்பதையிட்டு சீனா ஆழமாகச் சிந்திக்கின்றது. சீனாவுடன் ஓரு மோதலுக்கு என்றும் தயாராக இருப்பதால் மட்டுமே சீனாவுடனான மோதலைத் தடுக்கலாம் என ஜப்பானின் கொள்கை மாற்றமடைந்துள்ளது.

கிழக்குக் கரையில் இருந்து மேற்குக் கரையில் ஆதிக்கம்

பசுபிக் மாகடலின் கிழக்குக் கரையில் இருக்கும் அமெரிக்கா அதன் மேற்குக் கரையில் சீனா முழுமையான ஆதிக்கம் செலுத்துவதை விரும்பவில்லை. அதை முந்திக் கொண்டு தான் அங்கு ஆதிக்கம் செலுத்துவதற்கு துடிக்கின்றது. ஒஸ்ரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடனான உறவு அமெரிக்காவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. மற்ற ஆசிய நாடுகள் சீனாவை இட்டு கொண்டுள்ள அச்சமும் அமெரிக்காவிற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனால்தான் பல ஆண்டுகள் அமெரிக்காவுடன் போர் புரிந்த நாடாகிய வியட்நாமின் மக்கள் அமெரிக்காவை உலகிலேயே அதிகம் நேசிப்பவர்களாக மாறியுள்ளனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை தேவடியாள் மகன் என அழைத்த பிலிப்பைன்ஸ் அதிபர் அமெரிக்காவிற்கு ஆசியானில் தோன்றியுள்ள புதிய தடையாகும். கம்போடியா ஏற்கனவே சீனாவின் நெருங்கிய நட்பு நாடாக மாறிவிட்டது.

ஆசியான் நாடுகள்

புரூனே, மியன்மார்(பர்மா), கம்போடியா, இந்தோனேசியா, லாவொஸ், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகியவை ஆசியான் கூட்டமைப்பில் உள்ள நாடுகளாகும். இவற்றில் கம்போடியாவைத் தவிர ஏனைய நாடுகள் சீனாவுடனான வர்த்தகத்தைப் பெரிதும் விரும்புகின்றன. அதே வேளை சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து தப்ப ஐக்கிய அமெரிக்காவுடன் படைத்துறை ஒத்துழைப்பை நாடி நிற்கின்றன. இந்த இரண்டுக்கும் இடையிலான ஒரு சமநிலையைப் பேணுவதில் அவை திண்டாடுகின்றன. தென் சீனக் கடலில் ஏற்பட்டுள்ள முரண்பாடு சீனாவின் அயல் நாடுகளை அமெரிக்கா பக்கம் சாய வைத்துள்ளது.


வரைபடம் மூலம் ஆக்கிரமிக்கும் சீனா

அமெரிக்கா ஆசியச் சுழற்ச்சி மையம் என்ற திட்டத்தையும் பசுபிக் தாண்டிய வர்த்தகப் பாங்காண்மைத் திட்டத்தையும் தொடர்ந்து பசுபிக் மாக்கடல் மீதான ஆதிக்கப் போட்டி தீவிரமடைந்துள்ளது.  பசுபிக் தாண்டிய வர்த்தகப் பங்காண்மை பல பின்னடைவுகளைச் சந்தித்திருக்கும் வேளையிலும் பசுபிக்கை ஒட்டிய நாடுகளுடன் அமெரிக்காவின் வர்த்தக மற்றும் படைத்துறை ஒத்துழைப்புக்கள் சீனாவிற்குச் ச்வால் விடக்குடிய வகையில் அமையும். பசுபிக் மாக்கடலிலும் தென் சீனக் கடல் போல் ஒரு கொதிநிலையை உருவாக்கும் வகையில் சீனாவின் கல்வி அமைச்சு ஒரு புதிய உலக வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அதில் பசுபிக் மாக்கடலின் பெரும் பகுதியும் ஹவாய் தீவும், மைக்குரோனேசியாவின் பெரும் பகுதியும் சீனாவிற்கு சொந்தமானது எனக் காண்பிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவின் பசுபிக் தாண்டிய வர்த்தகப் பங்காண்மை 

அமெரிக்காவின் பசுபிக் தாண்டிய வர்த்தகப் பங்காண்மை ஒப்பந்தம் பசுபிக் வளைய நாடுகளுடனான வர்த்தகத்தை சீனாவை முந்திக் கொண்டு விருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது. இது சீனாவைச் சூழவுள்ள நாடுகளுடனான அமெரிக்காவின் உறவையும் வர்த்தகத்தையும் விரிவு படுத்தும் நோக்கம் கொண்டது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2012இல் தேர்தலில் வென்றவுடன் முதல் செய்த பயணம் சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கே. ஆசியான் மாநாட்டுக்குச் சென்ற ஒபாமா வியட்னாம், மலேசியா, சிங்கப்பூர் உட்படப் பல சீனாவின் அயல் நாட்டுப் பிரதிநிதிகளுடன் பசுபிக் தாண்டிய பங்காண்மை பற்றியே அதிகம் உரையாடினார். ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, வியட்னாம், சிங்கப்பூர், புரூனே, ஒஸ்ரேலியா, நியூ சிலாந்து, கனடா, சிலி பெரு ஆகிய நாடுகள் பசுபிக் தாண்டிய வர்த்தகப் பங்காண்மையில் இணைய ஒத்துக் கொண்டன. ஆனால் அதை ஒவ்வொரு நாடுகளினதும் பாராளமன்றங்கள் ஏற்றுக்கொள்வதில் பல பிரச்சனைகள் எதிர்கொள்ளப்படுகின்றன. 12 நாடுகளில் மலேசியப் பாராளமன்றம் மட்டுமே பசுபிக் தாண்டிய வர்த்தக உடன்படிக்கையை அங்கீகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டனும் டொனால்ட் ரம்பும் தமது எதிர்ப்பை வெளிவிட்டுள்ளனர். பசுபிக் தாண்டிய பங்காண்மை சீனாவை அமெரிக்கா பொருளாதார ரீதியில் சுற்றி வளைக்கும் தந்திரமே. கனடிய அரசின் ஆய்வின் படி பசுபிக் தாண்டிய வார்த்தக பங்காண்மை உடன்படிக்கை கனடிய மொத்த பொருளாதார உற்பத்தியை 4 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கும். ப.தா.வ.ப உடன்படிக்கை பல பிரச்சனைகளைச் சந்தித்தாலும் அது பல மீள் பேச்சு வார்த்தைகளின் பின்னர் மீளவும் உயிர் பெறும் வாய்ப்புக்களே அதிகம்.

சீனாவின் கடற்படை டம்மி பீஸா?

சீனா ஒரு விமானம் தாங்கிக் கப்பலை வைத்திருந்தாலும் இன்னும் ஒரு விமானம் தாங்கிக் கப்பலை நிர்மாணித்துக் கொண்டிருந்தாலும் அது அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு தலைமுறை பின் தங்கியுள்ளது. சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல் லியோனிங் முழுமையான செயற்பாட்டிற்கு வர இன்னும் ஒராண்டுக்கு மேல் எடுக்கலாம். சீனா பல வலுமிக்க நீர்மூழ்கிக் கப்பல்களை கொண்டிருந்தாலும் சீனக் கரையோரம் ஆழம் குறைந்த கடலாகும். அதனால் சீனக் கடற்படை ஒரு நீலக் கடல் கடற்படை (Blue Water Navy) அல்ல எனச் சில படைத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். நீலக் கடல் கடற்படை என்பது உலகின் எல்லாப் பாகங்களுக்கும் சென்று தாக்குதல் செய்யக் கூடிய கடற்படையாகும். சீனாவின் முத்து மாலைத் திட்டம் அரபிக் கடலுடன் முடிவடைகின்றது.

சீனாவின் காசோலை அரசுறவியல் (chequebook diplomacy)

ஒரு நாட்டின் பொருளாதாரம் அல்லது அதன் ஆட்சியாளர்கள் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது நிதி உதவி செய்து அதை தமது நட்பு நாடாக்குவது காசோலை அரசுறவியலாகும். சீனா குக் தீவுகள், மிக்ரோனேசியா, பப்புவா நியூ கினி, சமோ, டொங்கா ஆகிய பசுபிக் பிராந்திய நாடுகளுடன் தனது உறவை காசோலை அரசுறவாலேயே வளர்த்தது எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் அபரிமிதமான கடற்படை வளர்ச்சியும் பல பசுபிக் கரையோர நாடுகளை அச்சமடைய வைத்துள்ளன. சீனாவிற்கு ஈடு கொடுக்க முடியாமல் அமெரிக்கா பசுபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிவிடுமா என்ற அச்சமும் சில நாடுகளை ஆட்டிப்படைக்கின்றன. ஆனால் சீனாவின் மொத்தப் படைத்துறைச் செலவிலும் பார்க்க அமெரிக்கா தனது கடற்படைக்குச் செய்யும் செலவு அதிகமாகும். அமெரிக்கக் கடற்படையின் வலுவிற்கு சமமாக சீனக் கடற்படை வளர இன்னும் 30 ஆண்டுகள் எடுக்கும் எனச் சீன நிபுணர்களே மதிப்பிட்டுள்ளார்கள்.


இரசியாவும் பசுபிக் பிராந்தியமும்

சோவியத் ஒன்றியம் பசுபிக் பிராந்தியத்தில் பெரும் கடற்படையை நிறுத்தியிருந்தது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக பல இரசியக் கடற்படைக்கலன்கள் பசுபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறின. 2000-ம் ஆண்டு இரசியாவின் ஒரு வழிகாட்டி ஏவுகணை தாங்கிக் கப்பல் மட்டுமே பசுபிக்கில் இருந்தது. ஆனால் 2010-ம் ஆண்டு ஒரு பெரிய வழிகாட்டல் ஏவுகணைதாங்கிக் கப்பல், ஐந்து நாசகாரிக் கப்பல்கள், பத்து அணுவலுவில் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள், எட்டு டீசலில் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள் பசுபிக்கில் இரசியாவால் நிறுத்தப்பட்டன. 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கொண்ட ஒரு நீர்மூழ்கிக் கப்பலையும் இரசியா பசுபிக்கிற்கு அனுப்பியுள்ளது. ஒவ்வொரு கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையும் பத்து அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று எதிரி இலக்குகள் மீது வீச வல்லன. இவை 8300 கிலோ மீட்டர் தூரம் பாயக் கூடியவை. இரசியாவின் இந்த ஒரு நீர்மூழ்கிக் கப்பலால் எந்த அளவு பெரிய அழிவை ஏற்படுத்த முடியும் என்பதைக் காட்டுகின்றது. இரசியாவால் மட்டுமே அமெரிக்காவின் படைத்துறைக்குப் புலப்படாத அணுவலுவில் இயங்கும் Borei- and Yasen-class வகை நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்க முடியும். 2020-ம் ஆண்டு இரசியா இப்படிப்பட்ட எட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை உலகெங்கும் நிறுத்தவுள்ளது.  1996-ம் ஆண்டு தொடங்கப் பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கும் திட்டம் பல தடைகளைத் தாண்டி நிறைவேற்றப் பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கியத்துவம்

பசுபிக்கில் இந்தியாவின் உதவி அமெரிக்காவிற்கு அவசியம்

7517 கிலோ மீட்டர் நிளமான கடற்கரையைக் கொண்ட இந்தியாவிற்கு உலகிலேயே முன்னணிக் கடற்படை அவசியம். அதற்கு ஏற்ப இந்தியாவும் தனது கடற்படையின் வலுவை மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றது. எதிரி உன் எல்லைக்கு வர முன்னர் எதிரியின் எல்லைக்கு நீ செல்ல வேண்டும் என்பது போல் இந்தியா செயற்பட வேண்டும் என்னும் நிலை இந்தியாவிற்கு உருவாகியுள்ளது. சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்பதை இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement ( LEMOA) என்னும் உடன்படிக்கை செய்து கொண்டமை சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்காவும் இந்தியாவும் வழங்கல் வசதி மாற்றிகளை மாற்றிக்கொள்ளும் இந்த உடன்படிக்கை 2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைச்சாத்திடப்பட்டது. பத்து ஆண்டுகளாக இழுபறிப்பட்ட இந்த உடன்படிக்கை இந்தியாவில் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கைச்சாத்திடப்பட்டுள்ளமை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு எவ்வளவு கேந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்தது எனச் சுட்டிக் காட்டுகின்றது. இந்த உடன்படிக்கையின் படி ஒரு நாட்டின் போர் விமானங்களும் போர்க்கப்பல்களும் மற்ற நாட்டின் துறைமுகங்களிலும் விமானத் தளங்களிலும் தங்கி எரிபொருள் மீள் நிரப்பல், பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகளைச் செய்ய முடியும். இது நரி கொக்குக்கு கொடுத்த விருந்து போன்றது. தற்போது உள்ள சூழ் நிலையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களும் போர் விமானங்களும் பெருமளவில் இந்தியாவைப் பயன்படுத்த முடியும். இந்தியா எந்த அளவு அமெரிக்காவில் உள்ள தளங்களைப் பாவிக்க முடியும் என்பது கேள்விக்குறியே. ஆனால் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை இந்தியா பயன் படுத்த முடியும், இந்த ஒப்பந்தம் இந்தியாவில் அமெரிக்கா படைத்தளங்களை அமைப்பதற்கு ஒப்பானதாகும். இந்த ஒப்பந்தத்தின் முழுவிபரங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா உலகக் கடல்களில் ஆதிக்கம் செலுத்துவதற்கு முதுகெலும்பாக இருப்பது அதன் விமானம் தாங்கிக் கப்பல்களே. ஆனால் ஒரு அமெரிக்கப் படைத்துறை நிபுணர் தான் அமெரிக்கக் கடற்படை மீது தாக்குதல் தொடுப்பதாயின் அதன் வழங்கற் கப்பல்கள் மீதே முதல் தாக்குதல் நடத்துவேன் என்றார். அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் கடுமையான பாதுகாப்புடன் பயணிப்பவை அவற்றின் மீது தாக்குதல் நடத்துவது பல நாடுகளுக்கு முடியாத காரியம். ஆனால் அமெரிக்காவின் வழங்கற் கப்பல்களுக்குப் பலத்த பாதுகாப்பு இல்லை. அமெரிக்காவின் இந்த வலுமின்மைப் புள்ளியை இந்திய உறவாலும் ஒத்துழைப்பாலும் சரி செய்ய முடியும். சீனாவின் படைத்துறையின் வழங்கற் சேவை எனப் பார்த்தால் அமெரிக்காவின் வழங்கற் சேவையுடன் ஒப்பிடுகையில் மிகவும் மோசமாகவே உள்ளது. அது மட்டுமல்ல சீனாவின் மொத்தப் படைத் துறையே களமுனை அனுபவம் இல்லாததாகும்.

சமநிலையைத் தீர்மானிக்கும் இந்தியா

இந்தியா ஒரு வல்லரசாக இல்லாத போதிலும் வல்லரசுகளிடையான ஆதிக்கப் போட்டியில் இந்து மாக்கடலில் படைத்துறைச் சம நிலையைத் தீர்மானிக்கும் நாடாக தற்போது இந்தியா இருக்கின்றது. அதாவது எந்த வல்லரசின் பக்கம் இந்தியா இருக்கின்றதோ அந்தப் பக்கம் அதிக வலுவுள்ளதாக இருக்கும். அதனால்தான் சீனாவிற்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகியவை கொண்ட ஒரு படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்குவதில் ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபே அதிக அக்கறை காட்டுகின்றார் ஆனால் இந்த இரண்டு நாடுகளையும் நம்பி சீனாவிற்கு எதிராகக் கூட்டணி அமைத்து அதனுடனான பகைமையை மோசமாக்குவதா என இந்தியா யோசிக்கின்றது. இந்து மாக்கடலில் மட்டுமல்ல தென் சீனக் கடலிலும் மட்டுமல்ல பசுபிக் பிராந்தியத்திலும் படைத்துறைச் சமநிலையைத் தீர்மானிக்கும் வலிமையை இந்தியப் படைத்துறையின் வளர்ச்சி ஏற்படுத்தும். 2020-ம் ஆண்டு இரசியா தனது படத்துறையை புதுப்பிக்கும் திட்டத்தை நிறைவேற்றிய பின்னரும் சீனாவின் படைத்துறை மேலும் வளர்ச்சியடைந்த பின்னரும் உலகப் படைத்துறைச் சமநிலையைத் தீர்மானிப்பதில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் அமையும்.

Advertisements

Welcome நல்வரவு

Posted: September 15, 2008 in Main Page, Welcome
Tags: ,

culture

Welcome to my wordpress.

I publish my articles and poems here

2018 ஓகஸ்ட் 9-ம் திகதி அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்காவின் விண்வெளிப்படை என ஒரு தனியான படைப்பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே அமெரிக்காவிடம் தரைப்படை, வான் படை, கடற்படை, கடல்சார் படை, கரையோரப் பாதுக்காப்பு என தனித்தனியான படைப் பிரிவுகள் உள்ளன. அவற்றுடன் விண்வெளிப்படை என மேலும் ஒரு தனிப் படைப்பிரிவு ஆரம்பிக்கும் திட்டத்தை மைக் பென்ஸ் வெளியிட்டுள்ளார். 2018 ஜூன் மாதம் அதிபர் டொனால்ட் டிரம்பும் சொன்ன கருத்தை மைக் பென்ஸ் அதிகார பூர்வமாகப் பிரகடனம் செய்துள்ளார். அமெரிக்காவின் நோக்கம் விண்வெளியை படைத்துறை மயமாக்குதல் அல்ல ஆனால் விண்வெளியில் ஓர் ஆபத்து விளைவிக்கக் கூடிய மோதலைத் தவிர்ப்பதே என்றார் அமெரிக்கப் படைத்துறை ஆய்வாளர் ரொட் ஹரிசன். விண்வெளியில் உள்ள அமெரிக்காவின் வசதிகளை எதிரிகள் அழிக்காமல் தடுப்பது அமெரிக்காவிற்கு அவசியம் எனவும் அவர் சொல்லியுள்ளார்.

ரீகனின் நட்சத்திரப் போர் (Star War)

எதிரி நாட்டின் அணுக்குண்டில் இருந்து தமது நாட்டைப் பாதுகாப்பது எப்படி என்ற கேள்விக்கு Mutually Assured Destruction  என்னும் பதம் முன் வைக்கப்பட்டது. அப்பதத்தின் பொருள் என் மீது அணுக் குண்டு வீசினால் உன்மீது நான் அணுக்குண்டு வீசுவேன் அதனால் நானும் அழிவது நிச்சயம் நீயும் அழிவது நிச்சயம் என்பதாகும். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரீகன் இந்தப் பதிலை வெறுத்தார். இது இணை-தற்கொலை  ஒப்பந்தம் போன்றது என்றார். அதனால் கேந்திரோபாய பாதுகாப்பு முன்னெடுப்பு (Strategic Defence Initiative) என்ற திட்டத்தை அவர் 1983இல் முன்வைத்தார். அதை நட்சத்திரப் போர் (Star War) என அழைத்தனர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும் நட்சத்திரப் போர்த்திட்டத்தின் அபரிமிதமான செலவும், அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவீனப் பதுகாப்பு அளவிற்கு மிஞ்சி இருந்தமையும் அத்திட்டத்தைக் கைவிடும் நிலையை உருவாக்கியது. கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்தவுடன் அமெரிக்கா இரசியாவிற்கு எதிராக காய்களைத் தீவிரமாக நகர்த்திய போது இரசிய அரசுறவியலாளர்கள் அமெரிக்காமீது இரசியா அணுக்குண்டை வீசி முழு அமெரிக்காவையும் ஒரு கதிரியக்கம் மிக்க குப்பை மேடாக்க முடியும் எனப் பகிரங்கமாக மிரட்டினர். அதனால் அமெரிக்கா தனது பாதுகாப்பையிட்டு அதிக கரிசனை கொண்டது.

அமெரிக்காவின் திட்ட விபரம்

விண்வெளியில் உள்ள அமெரிக்க சொத்துக்களைப் பாதுகாத்தல், அமெரிக்கச் சொத்துக்களுக்கு ஆபத்து விளைவிக்க முயலும் எதிரிகளின் விண்வெளித் தாக்குதல் கருவிகளை அழித்தல், விண்வெளியில் பாரிய ஆகாயக் கற்கள் போன்ற இயற்கையால் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து பூமியைப் பாதுகாத்தல் போன்றவற்றை அமெரிக்காவின் விண்வெளிப் படை நோக்கமாகக் கொண்டிருக்கும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. 2018 ஜூன் மாதம் அதிபர் டொனால்ட் விண்வெளிப் படைத் திட்டத்தை முதலில் அறிவித்த போது அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனே ஆச்சரியப் பட்ட்டது. நாம் வெறுமனவே விண்வெளியில் இருப்பது மட்டுமல்ல எமது ஆதிக்கமும் அங்கு நிலவ வேண்டும் என டிரம்ப் சூளுரைத்தார். (“It is not merely enough that we have American presence in space, we must have American dominance in space.”). விண்வெளிப் படையை உருவாக்கும் திட்டம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது:

1 விண்வெளி அபிவிருத்தி முகவரகத்தை (Space Development Agency) உருவாக்குதல்.

 1. விண்வெளி செயற்படு படையை (Space Operations Force) உருவாக்குதல்
 2. அமெரிக்க கட்டளையகத்தை (United States Space Command) உருவாக்குதல்

சீனாவின் அச்சுறுத்தல்

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அதிகரிக்கும் அமெரிக்க ஆதிக்கம் தனது இருப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என நினைத்த சீனா அமெரிக்காவின் படையின் வலிவின்ன்மைப் புள்ளிகளை அடையாளம் காணும் முயற்ச்சியில் ஈடுபட்டது. அமெரிக்காவின் படையினர் இலத்திரனியல் தொடர்பாடலில் பெரிதும் தங்கி இருப்பதை சீனா அறிந்து கொண்டது. அத் தொடர்பாடல்களுக்கு அமெரிக்காவின் செய்மதிகள் மிக அவசியம் என்பதை சீனா உணந்தது. அமெரிக்காவின் செய்மதிகளை அழிப்பதாலும் இணையவெளி ஊடுருவல்கள் மூலமும் அமெரிக்காவின் தொடர்பாடலை அழித்து அமெரிக்காவின் படைத்துறையை செயலிழக்கச் செய்யலாம் என சீனா நம்பியது. அதனால் 2007-ம் ஆண்டு ஜனவரியில் சீனா செய்மதி அழிப்பு ஏவுகணையை உருவாக்கி விண்வெளியில் உள்ள தனது சொந்த வானிலை ஆய்வுச் செய்மதி ஒன்றின் மீது வீசி அதை அழித்தது.  சீனா வீசிய ஏவுகணை செங்குத்தாக விண்ணை நோக்கி 200 மைல்கள் பாய்ந்தது. 2015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலும் செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை சீனா பரிசோதித்தது. அந்த ஏவுகணை எந்த இடத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது என்பதும் அறியப்படவில்லை. சீனா தொடர்ந்து தனது செய்மதிகளை ஏவும் தளங்களை(space launchers ) மேம்படுத்தியும் வருகின்றது. சீனாவின் KZ-11 என்னும் தளத்தில் இருந்து செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகள் இப்போது வீசப்படலாம் என நம்பப்படுகின்றது.  2016 ஜூலையில் சீனா விண்வெளிக்கு அனுப்பிய Roaming Dragon என்னும் செய்மதி விண்வெளியில் உள்ள சிதைந்த மற்றும் பழுதடைந்த செய்மதிகளை வாரி அள்ளி விண்வெளியைத் துப்பரவாக்க என சீனா தெரிவித்திருந்தது. ஆனால் அது மற்ற நாடுகளின் செய்மதிகளை அழிக்கக் கூடியவை எனக் கருத்து வெளியானது. இரசியாவும் தரையில் இருந்து ஏவட்ட ஏவுகணை போன்ற ஒரு மர்மப் படைக்கலன்களால் தனது சொந்த செய்மதிகளை அழித்ததை அமெரிக்க செய்மதிகள் அவதானித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன. 1990-ம் ஆண்டு அமெரிக்கா விண்வெளியில் உள்ள மற்ற நாட்டுச் செய்மதிகளை அழிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டது. 1991இல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் அது கைவிடப்பட்டது. 2018 மார்ச்சில் ஒஸ்ரேலிய ஊடகம் ஒன்று இரசியா தனது விமானங்களில் இருந்து வீசும் லேசர் கதிகளின் மூலம் மற்ற நாடுகளின் செய்மதிகளை அழிக்கும் முயற்ச்சியில் வெற்றி கண்டுள்ளதாக அறிவித்தது. வானில் பறக்கும் விமானங்களில் இருந்து ஏவுகணைகளை வீசி அமெரிக்கச் செய்மதிகளை அழிக்கும் ஆய்வுகளை இரசியா செய்து முடித்துள்ளதாகவும் அமெரிக்கத் தரப்பு கருதுகின்றது.

ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளில் கவனம் செலுத்தும் சீனா

சீனா ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளை தொடர்ச்சியாகப் பரிசோதித்துக் கொண்டிருக்கின்றது. ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கிலும் அதிகமான வேகத்தில் பாயும் ஏவுகணைகளை ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் என அழைப்பர். ஒலியிலும் பத்து மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளைக் கூட சீனா உருவாக்கியுள்ளது எனச் செய்திகள் வெளிவருகின்றன. ஹைப்பர் சோனி ஏவுகணைகளை தரையில் இருந்து செயற்படும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் இடைமறித்து அழிக்க முடியாது என்ற நிலையில்தான விண்வெளிப்படையை உருவாக்குவதில் அமெரிக்கா திடீர்க்கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது. அத்துடன் சீனாவும் இரசியாவும் தமது செய்மதி எதிர்ப்பு வல்லமைகளை ஒன்றிணைத்து செயற்படுகின்றன என அமெரிக்கா நம்புகின்றது.

அமெரிக்க வான்படைச் செயலரின் எதிர்ப்பு

அமெரிக்காவின் வான்படையில் ஏற்கனவே விண்வெளிக் கட்டளையகம் (U.S. Air Force Space Command) என்ற ஒரு பிரிவு உண்டு. அது ஏற்கனவே எதிரி நாடுகள் விண்வெளியில் அமெரிக்காவிற்கு விடுக்கும் அச்சுறுத்தல்களைக் கையாள்கின்றது. அதனால் புதிதாக ஒரு ஆறாவது படைப் பிரிவு தேவையில்லை என்பது அமெரிக்கப் படைத்துறையினரின் கருத்தாக இருக்கின்றது. அந்த கட்டளையகமே தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். அது போலவே அமெரிக்கக் கடற்படையிலும் விண்வெளியில் செயற்படக் கூடிய வசதிகள் உண்டு. அது மட்டுமல்ல அமெரிக்காவின் பல் வேறு உளவுத்துறைகளும் விண்வெளியில் செயற்படக் கூடிய வல்லமையைக் கொண்டுள்ளன. டொனால்ட் டிரம்ப் தனது தனியான விண்வெளிப் படைப்பிரிவு அமைக்கும் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் அமெரிக்க வான்படைக்குப் பொறுப்பான செயலாளர் ஹிதர் வில்சனைப் பதவியில் இருந்து விலக்கும் எண்ணத்துடன் இருக்கின்றார். 2018 நவம்பரில் நடைபெறவிருக்கும் அமெரிக்கப் பாராளமன்றத் தேர்தலின் பின்னர் டிரம்ப் ஹிதர் வில்சனைப் பதவியில் இருந்து விலக்கலாம்.

நிதி ஒதுக்கீடு

முன்பு எப்போதும் இல்லாத அளவில் அமெரிக்கா இரசியாவிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் விண்வெளியில் ஆபத்துக்களை எதிர் நோக்குவதால் அதைச் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு அமெரிக்கா பாதுக்காப்பிற்காக ஒதுக்கப்பட்ட செலவீனங்களில் மாற்றங்கள் செய்து ஐந்து பில்லியன் டொலர்களை விண்வெளிப் பாதுகாப்பிற்கு ஒதுக்கியது. அமெரிக்காவின் செலவீனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அமெரிக்கப் பாராளமன்றமே செய்யும் அதிகாரம் கொண்டது. அமெரிக்காவின் வான் பாதுகாப்பிற்கு ஏற்கனவே பாராளமன்றம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 13பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. ஆனால் தனியாக ஒரு படைப்பிரிவை அமைக்கும் போது மேலும் செலவு அதிகமாகும். அதற்கான நிதி ஒதுக்கீட்டை பாராளமன்றம் அங்கிகரிக்க வேண்டும். விண்வெளிப்படைக்கு பதின்மூவாயிரம் படையினர் தேவைப்படலாம். அவர்களை மற்ற படைப்பிரிவுகளில் இருந்து எடுக்கும் போது அவை வலுவற்றதாக்கப்படலாம். ஆனால் தனியான ஒரு கட்டளையகத்தின் கீழ் செயற்பட்டால் மட்டுமே விண்வெளிப் படைப்பிரிவு திறன்படச் செயற்பட முடியும் என வெள்ளை மாளிகை நம்புகின்றது.

பன்னாட்டு நாணய நிதியம் 2018-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.9விழுக்காட்டால் வளரும் என முன்னர் நம்பியிருந்தது. ஆனால் அதை இப்போது 3.7விழுக்காடு எனக் குறைத்துள்ளது. இந்த நிலையில் முன்னணி வல்லரசுகள் தமது படைத்துறைச் செலவை அதிகரிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு உங்கந்ததாக அமையாது.

உலகம் அதிகம் அறிந்திராத அஜோவ் கடலில் ஓர் உலகப் போர் ஆரம்பமாகும் ஆபத்து உள்ளது. அஜோவ் கடலை செங்கடலுடன் இணைக்கும் அகலம் குறைந்த கேர்ச் நீரிணையைத் தவிர மற்ற எல்லாப்புறத்திலும் அது நிலத்தால் சூழப்பட்டுள்ளது. இரசியா உக்ரேனின் கிறிமியாவை 2014 மார்ச் மாதம் இணைத்ததைதவுடன் அஜோவ் கடலில் பிரச்சனை இருக்கவில்லை. அஜோவ் கடலுக்கு குறுக்கே இரசியாவையும் கிறிமியாவையும் இணைக்கும் பாலம் இரசியாவால் கட்டப்பட்டது. அந்தப் பாலத்தை இரசியா வேண்டுமென்றே 33மீட்டர் உயரமாகக் கட்டியுள்ளது. அதனால் உக்ரேனின் பெரிய கப்பல்கள் அந்தப் பாலத்தின் கீழாகச் செல்ல முடியாத நிலையை இரசியா உருவாக்கியுள்ளது. அது மட்டுமல்ல உக்ரேனுக்கு சொந்தமான ஆனால் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெற்க்ஸ் பிரதேசத்திற்கும் அது தலையிடியாக அமைந்துள்ளது. அதனால் அஜோவ் கடலில் உக்ரேன் அதிக அக்கறை காட்டத் தொடங்கியுள்ளது.

கேந்திர முக்கியம்மிக்க உக்ரேன்

இரசியாவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடாக இருக்கும் உக்ரேன் இரசியா, போலாந்து, சுலோவேனியா, ஹங்கேர், பெலரஸ், மொல்டோவா, ருமேனியா ஆகிய நாடுளுடனும் அஜோவ் கடலுடனும் செங்கடலுடனும் எலைகளைக் கொண்டுள்ளது. இரசிய எல்லையில் உக்ரேனுக்குள் உயர் மலைத் தொடர் இருப்பது இரசியாவைப் பொறுத்தவரை உக்ரேன் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளின் கைகளில் இருந்தால் அது இரசியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். அதனால் உக்ரேன் நேட்டோவில் இணைவதை எந்த விலை கொடுத்தும் தடுப்பதற்கு இரசியா தயாராக உள்ளது என்பதை உக்ரேனுக்கு எதிராக இரசியா 2014இல் செய்த படை நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது.

உக்ரேனின் பின்னணி

இரசியாவிற்கு ஆதரவாக மாறிய விக்டர் யுனோவோவிச்   பதவியில் இருந்து விலக்கப்பட்டதால் இரசியா ஆத்திரமடைந்தது. தனது படைகளை உக்ரேனின் வடகிழக்கு எல்லையை நோக்கி நகர்த்தியது. உக்ரேனில் இருக்கும் இரசியர்களைத் தன்பக்கம் இழுத்து. உக்ரேனின் ஒரு மாகாணமான கிறிமியாக் குடாநாட்டில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் தன்னுடன் இணைத்தது. இரசியர்கள் அதிகமாக வாழும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்கள் இரண்டு உக்ரேனில் இருந்து பிரிந்து செல்லப் போவதாக அறிவித்தன. இரசியாவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக ஐக்கிய அமெரிக்கா இரசியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளைச் செய்தது.  அவை பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தாவிடிலும் பல முதலீடுகள் இரசியாவில் இருந்து வெளியேறி இரசிய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி கண்டது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களுக்கும் உக்ரேன் அரசுக்கும் இடையில் போர் தொடர்ந்து நடக்கின்றது.

மின்ஸ்க் உடன்படிக்கையல்ல நடப்பொழுங்கு

உக்ரேன், இரசியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் இரசியத் தலையீட்டின் பின்னர் நடக்கும் மோதலைத் தடுக்க கிழக்கு ஐரோப்பாவில் உள்ள இரசிய ஆதரவு நாடான பெலரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன. அங்கு இரண்டு தடவை மின்ஸ்க் -1, மின்ஸ்க் -2 என இரண்டு உடன்பாடுகள் செய்யப்பட்டன. அவற்றிற்கு உடன்படிக்கை எனப் பெயரிடாமல் நடப்பொழுங்கு என அழைக்கப்பட்டன. உடன்படிக்கை என்பதற்கு பன்னாட்டு சட்டத்தில் இருக்கும் இடம் உடன்படிக்கை என்பதற்கு உள்ள இடத்திலும் குறைவானது. இந்த நடப்பொழுங்கில் சம்பந்தவட்டவர்கள் இரசியா, உக்ரேன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுடன் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்புமாகும் (Organization for Security and Co-operation in Europe). உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் மோதும் இரசிய ஆதரவுக் குழுக்களும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும், அங்கிருந்து படைகளையும் படைக்கலன்களையும் விலக்க வேண்டும், உக்ரேனிய அரசு கிளர்ச்சிக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும், உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அரசியலமைப்பில் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும், இரசியாவின் கூலிப்படைகள் உக்ரேனில் இருந்து வெளியேற வேண்டும், இரசிய உக்ரேனிய எல்லை உக்ரேனிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும் ஆகியவை மின்ஸ் நடப்பொழுங்கின் முக்கிய அமசங்களாகும். முதலாவது நடப்பொழுங்கு 201 செப்டம்பரில் கையொப்பமிடப்பட்டு 2015 ஜனவரியில் கைவிடப்பட்டது. பின்னர் இரண்டாவது நடப்பொழுங்கு 2015 பெப்ரவரியில் செய்யப்பட்டது.

இரசியா மீறுகின்றதாம்

ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பு (Organization for Security and Co-operation in Europe) உக்ரேனிற்கும் இரசியாவிற்கும் இடையிலான போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கின்றது. அது தனது ஆளில்லாப் போர்விமானங்கள் மூலம் செய்த கண்காணிப்புக்களின் படி இரசியாவில் இருந்து உக்ரேனுக்குப் படைகலன்கள் இரகசியமாக அனுப்புவது கண்டறியப்பட்டுள்ளது.

உடைந்த பாலங்கள்

2014இற்குப் பின்னரும் இரசியர்களையும் உக்ரேனியர்களையும் இணைக்கும் பாலங்களாக இருந்தவை இரசிய மொழியும் மரபுவழி கிறிஸ்தவமும் ஆகும். 2018 செப்டம்பர் மாதம் இரசிய திருச்சபையில் இருந்து உக்ரேன் பிரிந்து கொண்டது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த இரசியர்கள் உக்ரேனின் மற்றப் பிராந்தியத்தில் உள்ளவர்களைச் சந்திக்கும் போது இரசிய மொழியில் உரையாடுவது வழக்கம். இப்போது அது முற்றாக இல்லாமல் போய்விட்டது. உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள பல்கலைக்கழங்களில் பயிலும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த இரசியமொழி பேசும் மாண்வர்கள் இப்போது தங்கள் மொழியைக் கைவிட்டு விட்டு உக்ரேனிய மொழியில் உரையாடுகின்றார்கள். இரசியா ஆட்சியாளர்களுக்கும் உக்ரேனிய ஆட்சியாளர்களுக்கும் இடையில் உள்ள பகையிலும் பார்க்க உக்ரேனியர்களுக்கும் இரசியர்களுக்கும் இடையில் உள்ள பகை அதிகமாகிவிட்டது. அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சார்பான உக்ரேனிய அரசியல்வாதிகளுக்கு இது பெரும் வெற்றியாகும். 2014இன் பின்னர் உக்ரேன் பல பொருளாதார சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. அப்போது இரசியாவிற்கு அடங்கிப் போவது நல்லது என்ற கருத்து உக்ரேனியர்களிடம் இருந்தது. உக்ரேனின் பெரும்பாலான ஏற்றுமதி அப்போது இரசியாவிற்கே சென்றது. இரசியாவின் எரிபொருள் விநியோகத்தில் உக்ரேன் பெரிதும் தங்கியிருந்தது. இப்போது உக்ரேனின் ஏற்றுமதியில் பெரும் பகுதி இந்தியாவிற்கு செல்கின்றது.

சீரடையும் உக்ரேனியப் பொருளாதாரம்

கோதுமையும் சூரியகாந்தியும் பெருமளவில் விளையும் உக்ரேன் ஐரோப்பாவின் பாண் கூடை என அழைக்கப்படுகின்றது. இரசியா கிழக்கு உக்ரேனில் படைத்துறைத் தாக்குதலும் எஞ்சிய பிரதேசங்களில் பொருளாதாரத் தாக்குதலும் செய்யும் உத்தியுடனேயே செயற்படுகின்றது. பிரச்சனைக்குரிய பொருளாதாரமாக உக்ரேன் இருந்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது. சரியாக எல்லையை வரையறுக்க முடியாமல் நாட்டின் ஒரு பகுதியில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அது நேட்டோவில் இணைய முடியாது. 2014-ம் ஆண்டில் உக்ரேனிய நாணயம் தனது பெறுமதியில் 70விழுக்காட்டை இழந்தது. அரச நிதிப்பற்றாக்குறை மொத்த தேசிய உற்பத்தியின் 10 விழுக்காடாக இருந்தது. பொருளாதாரம் 6.6 விழுக்காடு சுருங்கியது. 2015இல் மேலும் 9.8விழுக்காட்டால் சுருங்கியது. ஆனால் 2017இல் இருந்து நிலைமை சீரடையத் தொடங்கியது. 2018-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் உக்ரேனியப் பொருளாதாரச் சுட்டிகள் நல்ல செய்திகளைத் தெரிவிக்கின்றன. உள்ளூர் கொள்வனவு அதிகரிக்கின்றது. விலைவாசி அதிகரிப்பு கட்டுப்பாட்டில் இருக்கின்றது. முதலீடுகள் அதிகரித்துச் செல்கின்றன.

மீண்டும் படைத்துறை உற்பத்தியில் உக்ரேன்

உக்ரேன் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த போது அது படைத் துறை உற்பத்தியில் சிறந்து விளங்கியது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தில் இருந்து உக்ரேன் பிரிந்தபோது அது உலகிலேயே ஐக்கிய அமெரிக்காவிற்கும்   இரசியாவிற்கும் அடுத்த படியாக மூன்றாவது பெரிய அணுக்குண்டு  நாடாக உருவெடுத்தது.    தன் வசமான அணுக்குண்டுகளை உக்ரேன் வைத்திருக்க விரும்பியது.   ஆனால் ஐக்கிய அமெரிக்காவும் இரசியாவும் அதை விரும்பவில்லை.   அரசியல் உறுதிப்பாடு உத்தரவாதமில்லாத ஒரு புதிய நாட்டிடம்   அதிக அளவிலான அணுக்குண்டுகள் இருப்பது   எங்கு போய் முடியும் என்ற அச்சம் பல நாடுகளிடம்  அப்போது இருந்தது. உக்ரேனின் முதல் அதிபர் லியோனிட் கிரவ்சக் (Leonid Kravchuk)  தமது நாட்டில் உள்ள அணுக்குண்டுகளை இரசியாவிடம் ஒப்படைத்து அவற்றை அழிப்பதற்கு  நிபந்தனை அடிப்படையில் ஒப்புக்கொண்டார்.    அவர் கேட்ட நிபந்தனை  பியூடப்பெஸ்ற் குறிப்பாணை அதாவது The Budapest Memorandum என்னும் பெயரில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.   அதன்படி உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டை  இரசியா, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள்  உறுதி செய்வதாக ஒத்துக் கொண்டன. ஆனால் அந்த உடன்படிக்கை காற்றில் பறக்கவிடப்பட்டு உக்ரேனின் கிறிமியா அபகரிக்கப்பட்டது. இப்போது உக்ரேன் மீண்டும் சிறந்த படைக்கலன்களை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டது.

உக்ரேனின் ஆளில்லாப் போர்விமானம்

2018 செப்டம்பரில் உக்ரேன் தான் உருவாக்கிய ஆளில்லாப் போர்விமானம் உக்ரேனின் படைத்துறை உற்பத்திக்கு ஓர் எடுத்துக் காட்டாக இருக்கின்றது. வேவுபார்த்தல், படை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், ஊடுருவப்பட முகியாத தொடர்பாடல், தொடர்ந்து 24 மணித்தியாலங்கள் பறக்கக் கூடிய வல்லமை, 200கிலோமீற்றர் வரை பறக்கும் திறன், இலக்குத் தப்பாமல் குண்டு வீசுதல் என பல பணிகளைச் செய்யக் கூடிய ஆளில்லாப் போர்விமானமாக அது இருக்கின்றது. அத்துடன் முன்பு பராக் ஒபாமா உக்ரேனிற்கு வழங்கத் தயங்கிய படைக்கலன்களை தற்போது டொனால்ட் டிரம்ப் வழங்குகின்றார்.

கடற் படைக்கலன்களை வழங்கவிருக்கும் அமெரிக்கா

உக்ரேனிற்கான அமெரிக்கச் சிறப்புத் தூதுவரான கேர்ட் வொல்க்கரும் இரசியாவின் சிறப்புத் தூதுவரான விளடிஸ்லாவ் சுக்கோவும் உக்ரேன் தொடர்பாக அடிக்கடி பேச்சு வார்த்தை நடத்துவது உண்டு. உக்ரேன் மோதலை குறைக்க இரசியத் தரப்பில் அக்கறை காட்டவில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. அதனால் தாம் அதிக படைக்கலன்களை உக்ரேனுக்கு வழங்கப் போவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. இரசியாவின் நடவடிக்கைகள் அஜோவ் கடலில் அண்மைக்காலங்களாக அதிகரித்துள்ளது. உக்ரேனும் இரசியாவும் அக்க்கடலைப் பங்கு போட்டுக் கொண்டாலும் உக்ரேனிடம் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கடற்படைக்கலன்கள் இல்லை. அதனால் இரசியா அங்கு தான் தோன்றித்தனமாக நடக்கின்றது.

உக்ரேன் விவகாரத்தில் இரசியா எந்தவித விட்டுக் கொடுப்புக்களையும் செய்யாது. அதற்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் அது சமாளிக்கின்றது. உக்ரேனில் இரசியா தன் பிடியை மேலும் இறுக்குவதைத் தடை செய்வது என்னும் போர்வையிலும் மின்ஸ்கில் ஒத்துக் கொள்ளப்பட்டவற்றை இரசியா மீறுகின்றது என்ற குற்றச் சாட்டிலும் உக்ரேனுக்கு படைக்கலன்கள் வழங்கப்படுகின்றது. இரசியாவிற்கு எதிராக உக்ரேனைப் போர் புரிய வைப்பதன் மூலம் இரசியப் பொருளாதாரத்தைச் சிதைக்கலாம் என்ற சதியும் பின்னணியில் இருக்கலாம்.

இந்தியாவின் முதலாவது தனியார் படைக்கல உற்பத்தி முயற்ச்சி 1940 ஆண்டு பிரித்தானிய ஆட்சியின் போது வால்சந்த ஹரிசந்த் ஜோசி என்பவரால் செய்யப்பட்டது. அவர் ஒர் அமெரிக்க முதலீட்டாளருடன் இணைந்து மைசூர் மகராசாவின் உதவியுடன் ஹிந்துஸ்த்தான் ஏயர்கிராஃப்ட் லிமிட்டெட் (Hindustan Aircraft Limited) நிறுவனத்தை உருவாக்கினார். பெங்களூரில் மகராசா வழங்கிய 700ஏக்கர் காணியில் இதன் உற்பத்தி ஆரம்பித்தது. முதலாவதாக Harlow PC-5 என்னும் ஒரு பயிற்ச்சி விமானம் உருவாக்கப்பட்டது. இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரித்தானிய அரசு அந்த நிறுவனத்தை 1942இல் அரசுடமையாக்கியது. இந்திய சுதந்திரத்தின் பின்னர் அந்த விமான உற்பத்தி நிறுவனம் இந்திய அரசின் உடமையானது. பின்னர் அந்த நிறுவனம் இந்திய அரசுக்கு சொந்தமான Hindustan Aeronautics Limited (HAL) நிறுவனத்துடன் இணைந்து கொண்டது.

பெருமை மிகு ஹல்

Hindustan Aeronautics Limited (HAL) தேஜஸ், ஹல் துருவ், மிக்-21 ஆகிய விமானங்களை உருவாக்கியது. பல உலங்கு வானூர்திகளையும் உற்பத்தி செய்தது. பல வெளிநாட்டு விமான உற்பத்தி நிறுவனங்களுக்கு அது உதிரிப்பாக உற்பத்திகளையும் செய்தது. ஆனால் உரிய நேரத்தில் வேலைகளை முடிப்பதில்லை என்ற கெட்ட பெயரையும் பெற்றுக் கொண்டது. Hindustan Aeronautics Limited (HAL)இன் முழுமையான உள்ளூர்த் தயாரிப்பான தேஜஸ் விமானம் சீனாவின் J-10இலும் பார்க்கச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. அத்துடன் இந்திய விமான உற்பத்தித் துறையில் ஒரு மைல்கல்லாகவும் கருதப்படுகின்றது. HAL உற்பத்தி செய்த HAL HF-24 Marut என்ற fighter-bomber விமானம் ஆசியாவின் முதலாவது ஜெட் விமானமாகும். 1971-ம் ஆண்டு நடந்த இந்திய பாக்கிஸ்த்தான் போரில் அது சிறப்பாகச் செயற்பட்டது. இந்த பெருமை மிகு HAL என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விமான உற்பத்தி நிறுவனத்தை இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வஞ்சித்தாரா என்ற கேள்வி இந்திய அரசியலை இப்போது உலுப்புகின்றது. படைத்துறை நிபுணர்களின் கருத்துப்படி ஒரு வல்லரசின் நம்பகத்தன்மைக்கு அதன் பாதுகாப்பு உற்பத்தித் துறை முக்கியமானதாகும். ஒரு போர் நடந்து கொண்டிருக்கும் போது படைக்கல இறக்குமதியில் தங்கியிருப்பது உகந்த ஒன்றல்ல.

இந்தியாவிற்கு தேவப்பட்ட பற்பணி (Multi-role) விமானம்

இந்தியா படைக்கலன்களை வாங்கிக் குவிப்பது பாக்கிஸ்த்தானுடன் போர் செய்வதற்கும் சீனாவுடன் போரைத் தவிர்ப்பதற்குமாகும். 2007இல் பாக்கிஸ்த்தானிடமுள்ள F-16 போர்விமானங்களையும் சீனாவின் J-10 போர்விமானங்களையும் கருத்தில் கொண்டு இந்திய விமானப்படை தமக்கு நடுத்தர பற்பணி தாக்குதல் போர்விமானங்கள் (Medium multi-role combat aircraft ) வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய அரசிடம் விடுத்தது. அமெரிக்கா அப்போது இந்தியாவிற்கு நவீன படைக்கலன்களை வழங்குவதில்லை. அமெரிக்கா இந்தியாவிற்கு போக்குவரத்து விமானங்களான C 130, C 17ஆகியவற்றையும் ரோந்து விமானமன P 8I  ஐயும் விற்பனை செய்தது. இந்தியாவிற்கு தற்காப்பு படைக்கலன்களை மட்டுமே வழங்குவது என்ற கொள்கையை அமெரிக்கா கடைப்பிடித்தது. அமெரிக்காவிடமிருந்து போர் விமானங்களை வாங்கினால் அது சிலசமயம் அரசியற் காரணங்களுக்காக தடைகளையும் எதிர்பாராத நேரத்தில் செய்யலாம் என்ற அச்சம் இந்தியாவிடம் இருந்தது. இரசியா இந்தியாவிற்கும் விற்பனை செய்யும் விமானங்களுக்கு அதிக விலை கொடுக்கப்படுகின்றது என்ற குற்றச் சாட்டும் அப்போது இருந்தது.

கேள்விக்குப் பல பதில்கள்

2007இல் இந்திய அரசு 126 விமானங்களுக்கான கேள்விப்பத்திரம் விடுத்தது

பதிலளித்தவை 1. பிரான்ஸின் ரஃபேல் விமான உற்பத்தி நிறுவனமான டசோ (Dassault), 2. இரசியாவின் மிக்-39 3. சுவீடனின் சாப் நிறுவனத்தின் JAS-39 Gripen 4. அமெரிக்க லொக்கீட்டின் F-16, அமெரிக்க போயிங்கின் F/A-18 Super Hornet, பிரித்தானியாவில் இருந்து Eurofighter Typhoon ஆகியவையாகும்.  1998-ம் ஆண்டு இந்திய அணுக்குண்டு பரிசோதனை செய்த போது பிரான்ஸ் பொருளாதார மற்றும் படைத்துறைத் தடையை இந்தியாவிற்கு எதிராக விதிக்கவில்லை. அப்போது பிரான்ஸ் இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் நம்பகரமான பாங்காளியாகக் கருதப்பட்டது. அமெரிக்கா இந்தியாவிற்கு விற்பனை செய்ய இருந்த Javelin AT missile இல் தடை வருமா என்ற நிலை இருந்தது. இந்தச் சூழலில் பிரான்ஸின் டசோ நிறுவனத்தின் ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் முடிவு இந்தியாவில் எடுக்கப்பட்டது. அது பல விமர்சனங்களுக்கும் உள்ளானது. இரசியப் படைத்துறை நிபுணர்கள் தங்களது Su27, Su30 ஆகிய போர் விமானங்களுக்கு முன்னர் ரஃபேல் ஒரு நுளம்பு என்றனர்.

ரஃபேலை நம்பிய இந்தியா

அமெரிக்காவின் F-18 பிரெஞ்சு Rafaelஉம் மணிக்கு 587மைல் வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருந்தன. ஒரு பறப்பில் பறக்க வல்ல ஆகக் கூடிய தூரம் என்பதைப் பார்க்கையில் F-18 587 மைல்கள் ரஃபேல் 1150 மைல்கள். அப்போது இருந்த நான்காம் தலைமுறைப் போர்விமானங்களில் ரஃபேல் சிறந்தது என இந்தியப் படைத்துறை நிபுணர்களும் இந்திய அரசும் கருதின. ஏற்கனவே மிராஜ் போர்விமானங்களை உற்பத்தி செய்த அனுபவம் டசோ நிறுவனத்திற்கு இருந்தது. நம்பகத் தனமை, படைகலன்களை காவும் அளவு, பல்வகை உணைர்கள் போன்றவற்றில் ரஃபேல் சிறந்தது என்பதும் அவர்களின் கணிப்பு. ரஃபேலின் களமுனை அனுபவம் என்று பார்க்கும் போது ஆப்கானிஸ்த்தான், லிபியா, மாலி போன்ற நாடுகளில் வலிமை குறைந்த எதிரிகளுக்கு எதிராகவே அது தாக்குதல்களைச் செய்துள்ளது. அப்போது ஒரு ரஃபேல் விமானத்தின் விலை 526 கோடி என ஒத்துக்கொள்ளப்பட்டது.

தேர்தல்: ஆதலால் ஊழல் செய்வீர்

2003-ம் ஆண்டு நடந்த சதாம் ஹுசேய்னுக்கு எதிரான ஈராக் போரில் புலப்படா விமானங்கள் அமெரிக்காவால் பாவிக்கப்பட்டது. அப்போது போர் விமானத் துறையில் புலப்படா விமானங்கள் எதிர்காலத்தில் பெரும் பங்கு வகிக்கும் என உணரப்பட்டது. ஆனால் 2007-ம் ஆண்டு புலப்படாத் தன்மையற்ற ரஃபேலை வாங்கும் முடிவை இந்த்யா எடுத்தது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்று. பொதுவாக ஒரு நாட்டில் தேர்தல் நடக்க முன்னர் ஆளும் கட்சிக்கு நிதி தேவைப்படும் போது பெரிய அளவில் படைக்கலன்களை இறக்குமதி செய்வதன் மூலம் ஆளும் கட்சி தனது தேர்தல் நிதியை ஊழல் மூலம் பெற்றுக் கொள்வது இலகுவானது.

ரஃபேலோடு தொடங்கிய Reliance Aerospace Technologies

2007-ம் ஆண்டு ரஃபேல் விமானம் வாங்கும் முடிவை எடுத்த பின்னர் 2008 செப்டம்பரில் முக்கேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் Reliance Aerospace Technologies Ltd. (RATL) என்னும் புதிய நிறுவனத்தை உருவாக்குகின்றது. அப்போதே டசோ நிறுவனமும் அம்பானியும் இணை உற்பத்தைப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து விட்ன்டன என ஐயங்கள் வெளிவிடப்பட்டன. 2011-ம் ஆண்டு இந்திய விமானப்படை டசோவின் ரஃபேலைத் தெரிவு செய்தது. 18 ரஃபேல் விமானங்கள் பறப்புக்குத் தயாரான நிலையில் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டன. எஞ்சிய 108விமானங்களும் இந்திய அரசுக்குச் சொந்தமான Hindustan Aeronautics Ltd (HAL) உடன் இணைந்து உற்பத்தி செய்யப் பேச்சு வார்த்தை நடந்தது ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. 2014 மார்ச்: விலை, தொழில்நுட்பம், படைக்கல முறைமை, பராமரிப்பு போன்றவை பற்றி உரையாடப்பட்டது. HAL நிறுவனமும் டசோவும் எப்படி வேலைகளைப் பகிர்வது என்பது பற்றி உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது. இவை யாவும் காங்கிரசு கட்சி இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் போது நடந்தவை. இறுதியானதும் உறுதியானதுமான முடிவு காங்கிரஸ் ஆட்சியின் போது இறுதி உடன்படிக்கை எட்டப்படவில்லை.

ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும்

2014 மே 26 நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து இந்தியாவில் உற்பத்தி என்னும் திட்டத்தை அறிவிப்பு விடப்பட்டது. 2015 மார்ச் அம்பானியின் Reliance Defence உருவக்கப்பட்டது. 2015 ஏப்ரல் 10 மோடி பிரான்ஸ் சென்றார் 36 ரஃபேல் வாங்க உடன்பட்டது. 2015 ஜனவரி பிரெஞ்சு அதிபர் ஹொலண்டே இந்தியா பயணம் செய்து ஜனவரி 26 குடியரசு நாளில் கலந்து கொண்டார். அதே வேளை ஹொலண்டேயின் பங்காளி நடிகை Julie Gayet யும் ரிலையன்ஸும் இணைந்து திரைப்படம் தயாரிக்கும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். 2015 ஜூன் இந்திய பாதுகாப்புத் துறை பழைய ரஃபேல் ஒப்பந்தத்தை இரத்து செய்தது. 2016 ஒக்டோபர் டசோ ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிரெட் (DRAL) நிறுவனம் உருவாக்கம் செய்யப்பட்டது.

உற்பத்தி வேறு கழுவித் துடைத்தல் வேறு

விமான உற்பத்தியில் எந்த முன் அனுபவமும் இல்லாத அம்பானியின் நிறுவனத்திற்கு ஏன் ரஃபேல் உற்பத்தி வழங்கப்பட்டது என்ற கேள்விக்கு மோடியின் ஆதரவாளர்கள் ஒரு பதிலை முன்வைக்கின்றார்கள். அமெரிக்கக் கடற்படையின் ஏழாவது பிரிவின் கலன்களைப் பராமரிக்கும் பொறுப்பை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அம்பானியிடம் ஒப்படைத்துள்ளது என்பதே அவர்களின் பதிலாகும். ரிலையன்ஸை அமெரிக்கா நம்பும் போது நாம் ஏன் நம்பக் கூடாது என அவர்கள் பதில் கேள்வி எழுப்புகின்றார்கள். ஏழாவது பிரிவின் கலன்கள் மோடியின் மாநிலமான குஜாராத்தில் வைத்தே பராமரிக்கப்படும். இப்போது இன்னொரு கேள்வி எழுகின்றது. ஒரு வாகனத்தை உற்பத்தி செய்வதும் அதை கழிவித் துடைத்து எண்ணெய் விடுவதும் ஒன்றா?

பிரெஞ்சு அதிபரின் பேட்டி

2018 செப்டம்பர் முன்னாள் பிரெஞ்சு அதிபர் மீடியாபார்ட் ஊடகத்துக்கு பேட்டி

மோடியின் வற்புறுத்தலால் அம்பானியுடன் கூட்டு உற்பத்தி ஒப்பந்தம் செய்து கொண்டதாகச் சொன்னார். இந்திய அரச நிறுவனமான HALஇற்கு மோடி வஞ்சனை செய்து விட்டு தனக்கு தேர்தல் நிதி வழங்கும் அம்பானிக்குச் சார்பாக நடந்து கொண்டார் என்ற குற்ற சாட்டு இப்போது முன் வைக்கப்படுகின்றது. அதனால் HAL எனப்படும் இந்துஸ்த்தான் ஏரோனோட்டிக்கலுக்கு இழப்பு ஏற்பட்டது எனக் கருதப்படுகின்றது. அது மட்டுமல்ல காங்கிரசு ஆட்சியில் ஒத்துக் கொள்ளப்பட்ட விலையிலும் பார்க்க மூன்று மடங்கு விலையான 1670 கோடி இப்போது கொடுப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் ரஃபேலில் புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என மோடி அரசு பதிலளித்தது. அவை எந்த அம்சங்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட போது பாதுகாப்புக் காரணங்களுக்காக அவை வெளியில் சொல்ல முடியாது என்கின்றது மோடி அரசு. 2017 டிசம்பரில் இருந்தே காங்கிரஸ் கட்சியினர்  அம்பானிக்கு சார்பாக மோடி அரசு நடப்பதாகக் குற்றச் சாட்டு முன்வைக்கின்றனர்.

தொடரும் ஒத்துழைப்புக்கள்

அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் Rafael Advanced Defence Systems Ltd என்னும் பிரெஞ்சு நிறுவனத்துடன் இணைந்து வானில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் உடன்பாடும் எட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் கடைசி இடத்தில் இருக்கின்றது. ஆனால் பிரான்ஸ் உட்பட ஆறு மேற்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்து உற்பத்தி செய்யும் மீட்டியோ (Meteor Europe) ஏவுகணைகள் முதலாம் இடத்தில் இருக்கின்றன. அவற்றை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அவை இணங்கியும் உள்ளன. ஆனால் அவற்றை இரசிய அல்லது இஸ்ரேலிய விமானங்களில் பொருத்தக் கூடாது என்ற நிபந்தனையை அவை விதித்துள்ளன. இரசியா அல்லது இஸ்ரேல் தமது தொழில்நுட்பத்தைத் திருடலாம் என்ற கரிசனையால் அப்படிச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தியத் தயாரிப்பான தேஜஸ்ஸில் அவற்றைப் பொருத்தலாம். ரஃபேலில் பொருத்துவதற்கு ஆட்சேபணை கிடையாது. அல்லது ஐரோப்பாவிடமிருந்து விமானங்களை இந்தியா வாங்க வேண்டி இருக்கும். ஆனால் மிட்டியோ ஏவுகணைகள் இந்தியாவின் வானாதிக்கத்தை சீனாவிலும் பார்க்க அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அம்பானியின் ஏவுகணைகள் அம்போ ஆகுமா?

2018 செப்டம்பர் 21-ம் திகதி இந்தியப் பங்குச் சந்தைக்கு ஒரு சோதனையான நாளாக அமைந்தது. அன்று பங்கு விலைகள் பெரு வீழ்ச்சிக்குப் பின்னர் சற்று நிமிர்ந்தன. இந்தியாவின் பொருளாதாரம் 2018-இன் இரண்டாம் காலாண்டில் 8.2விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. இது உலகின் பெரிய நாடுகளில் மிக அதிக அளவிலான வளர்ச்சியாகும். ஒரு நாட்டின் பொருளாதாரம் அதிக அளவில் வளர்ச்சியடையும் போது வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பில் அந்த நாட்டின் நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும். ஆனால் இந்திய ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றது. மற்ற வளர்முக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் வீழ்ச்சி குறைவானதாக இருந்தாலும் இந்திய ரூபாயின் வீழ்ச்சி பெரிய அரசியல் பொருளாதாரத் தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சி என்பது மதிப்பீடு மட்டுமே. பெரும்பாலும் சரியான கணிப்பீடாக இருப்பதில்லை.

விவரங்கெட்ட புள்ளி விபரங்கள்

2017-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் 7.7 விழுக்காடு வளர்ந்ததாக இந்திய புள்ளிவிபரங்கள் தெரிவித்தன. ஆனால் 2017இல் இந்தியாவின் ஏற்றுமதி வளரவே இல்லை, இந்திய வங்கிகள் கடன் வழங்குவது மந்த நிலையிலேயே இருந்தது. இந்தியத் தொழிற்துறை உற்பத்தி வளரவில்லை. இதனால் இந்தியப் பொருளாதாரம் 7.7விழுக்காடு வளர்கின்றது என்பது உண்மைக்கு மாறானதாக இருக்கின்றது என்றார் விஜய் ஆர் ஜோஸி (Emeritus Fellow of Merton College, Oxford and Reader Emeritus in Economics, University of Oxford). இந்தியப் பொருளாதாரம் வளர்ந்தும் அதன் நாணயப் பெறுமதி அதிகரிக்காமல் இருப்பதற்கும் இந்தியா தனது பொருளாதார வளர்ச்சி தொடர்பான பிழையான அல்லது பொய்யான புள்ளிவிபரங்களை வெளியிடுவது காரணமாக இருக்கலாம். சீனா உட்படப் பல வளர்முக நாடுகள் தமது பொருளாதார வளர்ச்சி தொடர்பாக பொய்யன அல்லது தவறான புள்ளிவிபரங்களை வெளியிடுவதாகப் பல பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர். Morgan Stanley Investment Management என்ற முதலீட்டு முகாமை நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியரான ருச்சிர் ஷர்மா இது பற்றி இண்டியன் எக்ஸ்பிரஸில் 2015இல் ஒரு கட்டுரை வரைந்துள்ளார். 2014-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் 6.9விழுக்காடு பொருளாதார வளர்ச்சியடைந்தது என்ற மோசமான பகி்டிக்கு உலகமே சிரிக்கிறது என்பது அவரது கட்டுரைத் தலைப்பு. 2018செப்டம்பர் 17-ம் திகதி திங்கட் கிழமை 8.2% வளரும் இந்தியாவின் ரூபாயின் மதிப்பு ஒரு புறம் சரிந்து கொண்டிருக்க மறுபுறம் 6.2% வளர்ச்சியடையும் சீனாவின் பங்குச் சந்தை 2014-ம் ஆண்டின் பின்னர் மோசமான வீழ்ச்சியை கண்டது.

பேரியப் பொருளியல் (MacroEconomic) சிக்கல்

ஒரு நாட்டின் நாணய மதிப்பிற்கு அதன் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இறக்குமதி அதிகமானால் நடைமுறைக்கணக்குப் பற்றாக்குறை ஏற்படும். இந்திய நடைமுறைக்கணக்குப் பற்றாக்குறை 0.7விழுக்காட்டில் இருந்து 1.விழுக்காடாக அதிகரித்துள்ளமையும், இந்திய ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக 2018 செப்டம்பர் வரை 14விழுக்காடு வீழ்ச்சியடைந்தமையும் 2018-09-15 இந்தியாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு$426பில்லியனிலிருந்து $399பில்லியனாகக் குறைந்தமையும், அரச நிதிப்பற்றாக்குறை 6.5 விழுக்காடாக இருத்தலும் இந்தியா ஒரு பேரியப் பொருளியல் (Macro Economic) சிக்கலில் மாட்டியுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றது. ஐக்கிய அமெரிக்காவிற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் அடுத்தபடியாக இந்தியாதான் உலகிலேயே அதிக அளவு சரக்கு வணிகப் பற்றாக்குறை உள்ள நாடாக இருக்கின்றது.

இந்திய நிதியமைச்சர் 2018 செப்டம்பர் 15-ம் திகதி அறிவித்த நடவடிக்கைகள்:

 1. அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துதல்.

உயர்ந்தவிலைக் கார்கள், வீட்டுச் சாதனங்கள் இலத்திரனியற்கருவிகள் போன்றவற்றின் இறக்குமதிகள் மீது கட்டுப்பாடு விதிக்கப்படும்

 1. அந்நிய முதலீட்டை இலகுவாக்குதல்

இந்தியாவில் வெளிநாட்டினரின் முதலீடு செய்வதற்கு உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதுடன் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இந்தியர்கள் செய்யும் முதலீட்டை இலகுவாக்குதலும் செய்யப்படும்.

 1. வெளிநாட்டு நாணயத்தில் இந்திய நிறுவனங்களைக் கடன் பட அனுமதித்தல்.

இந்த நடவடிக்கைகளின் பின்னரும் 2018-09-17 ரூபா 1% வீழ்ச்சியடைந்தது. 2018-09-15 இந்தியாவின் வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பு$426பில்லியனிலிருந்து $399பில்லியனாகக் குறைந்தது.

மசாலா கடனீடு (Masala Bonds)

உலகெங்கும் உள்ள பெரிய தனியார் நிறுவனங்கள் தமக்குத் தேவையான நிதியை வங்கிகளிடமிருந்து பெறுவது மட்டுமல்ல கடனீடுகள் (Bonds) மூலமாகவும் நிதி திரட்டுவதுண்டு. வளர்ச்சியடைந்த நாடுகளில் இது சாதாரணம். இந்தியா தனது தனியார் நிறிவனங்களை இந்தியா ரூபாயில் கடனீடுகளை வழங்க 2015இல்அனுமதித்துள்ளது. பொதுவாக நாணய மதிப்பு ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க அமெரிக்க டொலரில் தனியார் நிறுவனங்கள் கடனீடுகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கும். இந்திய ரூபா மோசமான மதிப்பிழப்பைச் சந்திக்கும் போது வெளிநாட்டு நாணயங்களில் கடன் வாங்கிய இந்திய தனியார் நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதைத் தவிர்க்கவே இந்திய ரூபாயில் கடனீடுகள் வழங்க இந்திய காப்பொதுக்க வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இந்த கடனீடுகளை உலக நிதி நிறுவனங்கள் மசாலா கடனீடுகள் எனக் கிண்டலாக அழைக்கின்றன. டொலர் கடனீடுகளில் நாணய மதிப்பு ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை கடன் படும் நிறுவனங்களே தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் மசாலா கடனீடுகளில் கடன் கொடுப்பவர்களே நாணய மதிப்பிறக்கத்தால் கலங்க வேண்டியிருக்கும்.

முன்னால் வேறு இன்னாள் வேறு

முன்னாள் இந்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் ரூபாவின் வீழ்ச்சிக்கு எதிராக மோடி அரசு எடுத்த நடவடிக்கைக்கள் காலம் கடந்தவையாக உள்ளன என்றதுடன் அரசு அரை மனதுடனேயே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது என்றார். ஆனால் 2013-ம் ஆண்டு அவர் நிதியமைச்சராக இருந்த போது இந்திய ரூபா பெறுமதி வீழ்ச்சியடைந்த போது அதையிட்டுக் கலவரமடையத் தேவையில்லை என்றவர் ப சிதம்பரம். ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி குறையும் போது அதன் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புண்டு என்பது பொதுவான பொருளியல் விதியாகும்.

வளரும் பொருளாதார நாடுகளின் பொதுப்பிரச்சனை

தற்போது எல்லா வளர்முக நாடுகளின் நாணயத்தின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக குறைவடைகின்றது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் குறைந்த அளவிலேயே வீழ்ச்சியடைந்துள்ளது. அதிகரிக்கும் அமெரிக்க வட்டி விழுக்காடு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள வர்த்தகப் போர், உலகமெங்கும் பரவும் இறக்குமதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவற்றால் உலகப் பொருளாதாரத்தில் ஒரு நம்பிக்கையின்மை உருவாகியுள்ளது. அதனா வளர்முக நாடுகளின் நாணயங்களின் பெறுமதிகள் வீழ்ச்சியடைகின்றன.

பெரியண்ணனுடன் பிரச்சனை

படைத்துறை அடிப்படையில் நெருங்கும் இந்தியாவும் அமெரிக்காவும் பொருளாதார அடிப்படையில் விலகியே நிற்கின்றன. அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடுகளையே கண்டபடி விமர்சிக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவைக் கேந்திரோபாய பங்காளி என்றே அழைக்கின்றார். ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் இன்னமும் மூடப்பட்ட நிலையில் இருப்பதாக அவர் கருதுகின்றார். அவரது வர்த்தகப் போர் இலக்குகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா ஈரானிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை டொனால்ட் டிரம்ப் விரும்பவில்லை.  இந்திய எரிபொருள் தேவையின் 80% இறக்குமதி செய்யப்படுகின்றது. சவுதி அரேபியாவும் பாக்கிஸ்த்தானும் நெருக்கமான உறவை வைத்திருப்பதைச் சமாளிக்க இந்தியாவிற்கு ஈரானின் நட்பு அவசியம். உலக எரிபொருள் விலை அதிகரிப்பு இந்தியப் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல இந்திய ஆளும் கட்சிக்கும் பாதகமாக அமையும். அதைச் சரிசெய்ய பொருளாதாரத் தடைக்கு உள்ளாகியிருக்கும் ஈரானிடமிருந்து எரிபொருள் வாங்குவதை இந்தியா விரும்புகின்றது. ஈரானிடமிருந்து எரிபொருள் வாங்கினால் அதற்கான கொடுப்பனவுகள் ஈரானைப் போய்ச் சேராமல் அமெரிக்க தடைகள் செய்யலாம். அதைத் தவிர்க்க ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்காத ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை இந்தியா நாடியுள்ளது. அதை எந்த வகையில் அமெரிக்கா பார்க்கும் என்பது கேள்விக்குரிய ஒன்றே.

இந்தியா மட்டுமல்ல

கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக ஆர்ஜெண்டீனாவின் நாணயம் 546விழுக்காடும், துருக்கியின் லிரா 221விழுக்காடும், பிரேசிலின் ரியால் 84 விழுக்காடும், தென் ஆபிரிக்காவின் ரண்ட் 51 விழுக்காடும், மெக்சிக்கன் பெசோ 47 விழுக்காடும், மலேசிய ரிங்கிட் 27 விழுக்காடும் வீழ்ச்சியடைந்திருக்கையில் இந்திய ரூபா 16விழுக்காடு மட்டுமே வீழ்ச்சியடைந்துள்ளது. இந்திய ரூபாவின் வீழ்ச்சி சமாளிக்கக் கூடியது என்கின்றனர் இந்திய ஆட்சியாளர்கள்.

பன்னாட்டு நாணய நிதியம்

2018 செப்டம்பர் 18-ம் திகதி பன்னாட்டு நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில்:

 1. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருளாதாரம் ஒரு மூடப்பட்ட பொருளாதாரம்.
 2. 2018இன் இரண்டாம காலாண்டில் இந்தியாவின் பொருளாதார உற்பத்தியில் ஏற்றுமதியின் பங்கு அதிகரித்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பிழப்பு இதை மேம்படுத்தும்.
 3. இந்திய நாணயங்களைச் செல்லுபடியற்றதாக்கியமை, ஜீஎஸ்டி வரிவிதிப்பு ஆகிய இரண்டு தடைகளையும் இந்தியப் பொருளாதாரம் தாண்டி விட்டது. இனி வளர்ச்சிப் பாதையில் அது தொடரும்.
 4. இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு மக்களின் கொள்வனவு அதிகரிப்பும் முதலீட்டு அதிகரிப்பும் இனி பங்களிப்புச் செய்யும்.

5- தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை எண்மியப் படுத்துதலும் நியமப்படுத்துதலும் அதிக வரி வசூலிப்புச் செய்ய உதவுவதால் இந்திய அரச நிதிப் பற்றாக்குறை சீரடையும்.

பன்னாட்டு நாணய நிதியத்தின் கருத்துக்களை பன்னாட்டு முதலீட்டாளர்கள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. வளர்முக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியமானதாகக் கருதப்படுகின்றது. நரேந்திர மோடியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு 2017-ம் ஆண்டு 86விழுக்காடு இந்தியர்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக கருத்து வெளியிட்டனர் 2018-ம் ஆண்டு அது 56 விழுக்காடாகக் குறைந்து விட்டது. இந்தியாவில் நிகர வெளிநாட்டு முதலீடு குறைந்து கொண்டே செல்கின்றது. முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கான காரணங்கள்:

 1. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகியவற்றின் பொருளாதாரங்கள் வளர்ச்சியடையத் தொடங்கியதால் அவற்றின் நடுவண் வங்கிகள் அளவுசார் இறுக்கத்தைச் (QUANTITATIVE TIGHTENING) செய்யத் தொடங்கியுள்ளன. அதாவது தமது நாடுகளின் வங்கிகளிடையேயான நாணயப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தொடங்கிவிட்டன. அதனால் அவற்றின் நாணயங்களின் பெறுமதி தொடர்ந்து அதிகரிக்கும். அந்த நாடுக வட்டியும் அதிகரிக்கும். இந்தியாவில் முதலீடு செய்வதிலும் பார்க்க உறுதியான அரசியல் நிலைப்பாடுடைய நாடுகளில் முதலீடு செய்வதை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்புகின்றார்கள்.
 2. 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலின் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதை தற்போது உறுதியாகச் சொல்ல முடியாத நிலை இருப்பதால் ஓர் உறுதியற்ற நிலை இந்தியாவில் தோன்றியுள்ளது.
 3. உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது இந்தியாவில் பணவீக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.

ஆனால் இந்தியாவில் கட்டிடங்களில் முதலீடு செய்வதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அக்கறை காட்டுகின்றார்கள். அதற்கு அவர்கள் பல சிவப்பு நாடாக்களைக் கடக்க வேண்டியுள்ளது.

ரூபாயின் மதிப்பிறக்கம் இந்தியாவின் ஏற்றுமதியை கூட்டுவதற்கு தரமான பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்திய ஏற்றுமதி பெரும்பாலும் மூலப் பொருட்களாகவே இருக்கின்றன. தொழில்துறை உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான உட்கட்டுமானங்கள் இந்தியாவில் போதிய அளவு இல்லை என்ற குற்றச் சாட்டு இதுவரைகாலமும் முன்வைக்கப்பட்டது. உலக வங்கி இந்திய உட்கட்டுமானத் துறையில் பல பசுந்தளிர்களைக் காணக் கூடியதாக இருக்கின்றது

2018 ஆகஸ்ட் மாதம் இரசியா தனது பெரிய கடற்படையணி ஒன்றை சிரியாவிற்கு அனுப்பியமை மத்தியதரைக்கடலில் ஓர் ஆதிக்கப்போட்டிக்கு வித்திட்டது போல் தோன்றுகின்றது. உலக எரிபொருள் விநியோகத்தில் பெரும் பங்கு வகிக்கும் மத்தியதரைக்கடல் வரலாற்றி ரீதியாக பேரரசுகளின் உலக ஆதிக்கத்திற்கு முக்கியமான ஒன்றாக இருந்தது. ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களையும் ஒட்டி இருக்கின்ற மத்தியதரைக் கடல் புரதான காலத்தில் இருந்தே முக்கியத்துவம் வாய்ந்த கடலாக மத்தியதரைக் கடல் இருந்து வருகின்றது. இது மேற்குப் புறத்தில் ஜிப்ரோல்டர் நீரிணை மூலம் அட்லாண்டிக் மாக்கலுடன் தொடுக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலின் இருபுறமும் பெருந்தொகையான நதிகள் வந்து அதில் கலக்கின்றன. அவற்றுள் உலகின் பெரிய பத்து நதிகளாகிய Rhone, Po, Drin-Bojana, Nile, Neretva, Ebro, Tiber, Adige, Seyhan, and Ceyhan ஆகியவையும் அடக்கம். தொன்று தொட்டே உலகின் பெரிய அரசுகளிற்கு இடையிலான கலாச்சாரப் பரிவர்த்தனைகளும் பண்டமாற்ற்றுக்களூ மத்திய தரைக்கடலூடாக நடை பெற்றது.

பழம்பெருமை வாய்ந்த மத்தியதரைக்கடல்

பதினெட்டாம் நூற்றாண்டில் ஜேர்மனியில் வாழ்ந்த தத்துவ ஞானி பிரெட்றிச் ஹெஜல் பூமிப்பந்தின் மூக்காற்பங்கிற்கு மத்திய தரைக்கடல் ஒன்றுபடுத்தும் மூலம் என்றார். புராதான கிரேக்கர்களும் ரோமர்களும் இந்தியாவுடனும் சீனாவுடனும் மத்திய தரைக்கடலினூடாகவே வர்த்தகம் செய்தனர். கிறிஸ்த்துவிற்கு முன்னர் 16-ம் நூற்றாண்டில் இருந்து பல நூற்றாண்டுகளாக இருந்த எகிதியப் பேரரசு மத்திய தரைக்கடலை ஒட்டியே இருந்தது. கிறிஸ்த்துவிற்கு 1792 ஆண்டுகளுக்கு முன்னர் பபிலோனியர்கள் மத்திய தரைக்கடலில் ஆதிக்கம் செலுத்தினர். தற்போதைய ஈராக், சிரியா போன்றவற்றை உள்ளடக்கிய மெசப்பட்டோமியா அவர்களது பிரதேசமாக இருந்தது. மத்திய தரைக்கடல் அவர்களது வெளியுலகத் தொடர்பில் பெரும் பங்கு வகித்தது. இது போலவே கிறிஸ்த்துவிற்கு 800 ஆண்டுகளிற்கு முன்னர் கிரேக்கப் பேரரசு, கிறிஸ்த்துவிற்கு 27 ஆண்டுகளிற்கு முன்னர் ரோமப் பேரரசு ஆகியவை மத்தியதரைக்கடலை ஒட்டியே இருந்தன.உலக வரலாற்றில் நீண்டகாலமாக இருந்த துருக்கியரின் உதுமானியப் பேரரசிற்கும் மத்திய தரைக்கடலே முக்கிய போக்குவரத்துப் பாதையாக இருந்தது. பிரித்தானியப் பேரரசும் மத்திய தரைக்கடலில் அதிக அக்கறை காட்டியது. பிரித்தானிய குடியேற்ற ஆட்சி பல நாடுகளில் முடிந்த பின்னரும் பிரித்தானியா மத்தியதரைக்கடலில் ஜிப்ரோல்டா, சைப்பிரஸ் ஆகியவற்றில் தனது படைகளை வைத்திருக்கின்றது. மேலும் மத்திய தரைக்கடல் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தால் ஓமான், கட்டார், பாஹ்ரேன் ஆகிய நாடுகளில் பிரித்தானியப் படைகள் நிலைகொண்டுள்ளன.

தற்போதைய அரசுகள்

மத்திய தரைக்கடலை ஒட்டி இப்போது 21 நாடுகள் இருக்கின்றன. ஐரோப்பாவில் ஸ்பெயின், பிரான்ஸ், மொனொக்கோ, இத்தாலி, மால்டா, சுலோவேனிய, குரோசிய, பொஸ்னியா, ஹெர்ஜிக்கோவீனா. மொண்டினீக்ரொ, அல்பேனியா, கிரேக்கம் ஆகிய ஐரோப்பிய நாடுகளும் துருக்கி, சைப்பிரஸ், சிரியா, லெபனான், இஸ்ரேல் ஆகிய ஆசிய நாடுகளும் எகிப்து. லிபியா, துனீசியா அல்ஜீரியா, மொரொக்கே ஆகிய ஆபிரிக்க நாடுகளும் மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ளன.

ஒரு துருவத்தை விரும்பாத புட்டீன்

சோவியத் ஒன்றியம் வலுவடைந்திருந்த போது மத்தியதரைக்கடலில் அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையில் கடும் போட்டி உருவானது. 1991-ம் ஆண்டு நடந்த சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்காவின் ஆதிக்கத்தில் ஒரு துருவ ஆதிக்கம் உலகில் தலை தூக்கத் தொடங்கியது. இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் அமெரிக்காவின் ஒரு துருவ ஆதிக்கத்தை மிகவும் வெறுக்கின்றார். மீண்டும் சோவியத் ஒன்றியம் போல் ஒன்றை இரசியாவின் தலைமையில் உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். அதன் முதற்படியாக உக்ரேன் நேட்டோவில் இணைவதைத் தடுத்தார். கிறிமியாவை இரசியாவுடன் இணைத்தார். அடுத்தபடியாக சிரியாவில் தனக்கு ஆதரவான ஆட்சி இருக்க வேண்டும் என்பதற்காக அதிபர் பஷார் அல் அசாத்தை அகற்றும் அமெரிக்காவின் திட்டத்தை முறியடித்தார். முழு சிரியாவும் அசாத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக துருக்கியின் வேண்டுகோளைப் புறம் தள்ளி இத்லிப் மாகாணத்தில் பெரும் விமானத்தாக்குதல்களைச் செய்கின்றார்.

 

சீனாவும் மத்திய தரைக்கடலில்

சீனாவை உலகின் முதற்தர நாடாக்க வேண்டும் என்பதில் அதன் அதிபர் ஜி ஜின்பிங் அதிக முனைப்புடன் செயற்படுகின்றார். இருவரும் வலிமை மிக்க தலைவர்களாக தத்தம் நாடுகளில் திகழ்கின்றனர். இருவரும் முழுமையான ஒத்துழைப்பிற்கு தயாராக இல்லை. சீனாவை புட்டீன் மிகுந்த ஐயத்துடனே நோக்குகின்றார். மத்திய ஆசியாவை நோக்கிய சீனாவின் விரிவாக்கம் இரசியாவிற்கு ஆபத்தானது என புட்டீன் கருதுகின்றார். இரசியாவும் சீனாவும் வலிமையான நாடுகள். ஆனால் வலிமை மிகுந்த நாடுகள் அல்ல. இரசியாவின் பொருளாதாரமும் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியும் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை அசைக்கப் போதியதாக இல்லை. இரு நாடுகளும் மத்தியதரைக்கடலில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் தற்போது இல்லாவிடிலும் இனி வரும் காலங்களை இரு நாடுகளும் அதற்க்கு நிர்ப்பந்திக்கப்படும். சீனா மத்திய தரைக்கடலின் முக்கியத்துவத்தை உணர்ந்தே ஜிபுக்தியில் தனது முதலாவது வெளிநாட்டுக்கடற்படைத்தளத்தை உருவாக்கியது.

மத்தியதரைக்கடலூடாக வட ஆபிரிக்க மற்றும் மேற்காசிய நாடுகளில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் மேற்கொண்டால் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது எரிவாய்த் தேவைக்கு சிரியாவில் தங்கியிருப்பதைத் தவிர்க்கலாம். அந்த எரிவாயுத்திட்டத்தில் சிரியா காத்திரமான பங்கினை வகிக்கும். அதனால்தான் சிரியாவில் மேற்கு ஐரோப்பாவினதும் ஐக்கிய அமெரிக்காவினதும் எண்ணம் நிறைவேறாமல் இருப்பதற்கு இரசியா பெரும் பாடு படுகின்றது.

போட்டி நகர்வுகள்

2018 ஓகஸ்ட் மாதம் இரசியா தனது பெரும் கடற்படையணி ஒன்றை சிரியாவிற்கு நகர்த்தியது. இதற்கு உடனடியாக அமெரிக்கா எதிர்வினையாற்றியது. அமெரிக்காவின் கிழக்குக் கரைக்கும் அத்லாண்டிக் மாக்கடலுக்கும் பொறுப்பான இரண்டாவது கடற்படைப் பிரிவின் தளபதியும் மத்தியதரைக்கடற்பரப்பிற்குப் பொறுப்பான ஆறாவது கடற்படைப் பிரிவின் தளபதியும் அமெரிக்காவின் ஐரோப்பாவிற்கான கட்டளைத் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டு இரசியாவின் நகர்வை எப்படி எதிர் கொள்வது  என்பது பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இதைத் தொடர்ந்து சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவிக்கப்பட்டால் அமெரிக்கா முன்பு ஒரு போதும் செய்திராத கடுமையான தாக்குதல் சிரியாவில் செய்யப்படும் என அமெரிக்காவில் இருந்து அறிக்கை வெளியானது. ஆனால் அமெரிக்கா ஏற்கனவே மத்தியதரைக்கடலில் சிரியாமீது தாக்குதல் நடத்த பெரும் படைக்குவிப்பைச் செய்தபடியால் தானும் படைகளை நகர்த்தியதாக இரசியா தெரிவித்தது.

அமெரிக்கா முதன்மையானதுதான்

மத்தியதரைக்கடலாதிக்கப் போட்டி என்று வரும்போது இரசியாவால் அமெரிக்காவின் கடற்படையை அழிக்க முடியாது. அமெரிக்காவின் விமானம் தாங்கிக்கப்பல்கள் எண்ணிக்கையிலும் தரத்திலும் இரசியாவின் ஒரே விமானம் தாங்கிக்கப்பலிலும் பார்க்க உயர்ந்தவை. இரசியாவின் கடற்படைக்கு பெரும் அனுபவமில்லை என்ற கருத்து நிலவிய வேளையில் 2015-ம் ஆண்டு இரசியா கடல்வழியான பெரும் படைநகர்வை சிரியாவிற்கு செய்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மேற்கு ஐரோப்பா தனித்து இரசியாவை எதிர்கொள்ள முடியுமா?

அமெரிக்கா எரிபொருளில் தன்னிறைவு அடைந்துள்ள வேளையில் அமெரிக்கா முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்ற டிரம்பின் கொள்கையாலும், ஐரோப்பா தனது பாதுகாப்பை தானே செய்து கொள்ள வேண்டும் என்ற டிரம்பின் நிலைப்பாட்டாலும் இரசியாவை மேற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர் கொள்ள முடியுமா? கடற்படையைப் பொறுத்தவரை நேட்டோவின் மூன்றாவது பெரிய கடற்படையைக் கொண்ட கிரேக்கத்தின் கடற்படை இரசியாவின் கடற்படையிலும் பார்க்க வலிமையானது. அமெரிக்காவினதும் துருக்கியனதும் உதவி இன்றி ஏனைய நேட்டோ நாடுகள் மத்திய தரைக்கடலில் தமது கடற்படைகளைத் திரட்டும் போது அவற்றின் வலிமை இரசியாவின் வலிமையிலும் பார்க்கப் பத்து மடங்காக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரசியா மத்தியதரைக்கடலிற்கு தனது கடற்கலன்களை துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் உள்ள குறுகிய அகலமுள்ள நீரிணையூடாக நகர்த்த வேண்டும். அந்த திருகுப்புள்ளியில் வைத்து கிரேக்கத்தாலும் சைப்பிரஸில் நிலை கொண்டுள்ள பிரித்தானியப் படைகளாலும் இரசியக் கடற்படையின் கப்பல்களை நிலைகுலையச் செய்ய முடியும்.

சிறுதடியைப் பார்த்து மோதலைத் தவிர்க்கும் சண்டியர்கள்

வட கொரியாவிலும் பார்க்க அமெரிக்காவின் படைவலு மிகப் பெரியது. ஆனால் வட கொரியாவின் மீது தாக்குதல் ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள் தென் கொரியாமீது வட கொரியா கடுமையான தாக்குதலைச் செய்து பெரும் சொத்திழப்பை ஏற்படுத்த முடியும். அதைத் தவிர்ப்பதற்காகவே வட கொரியாவுடன் ஒரு மோதலை அமெரிக்கா தவிர்த்தது. அது போலவே தாய்வானும் சீனாவை இலக்கு வைத்து பல ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருப்பதால சீனாவின் கிழக்குக் கரையோராத்தில் உள்ள பல தொழிற்பேட்டைகளை அழிக்க முடியும். ஒரு நாடு தன்னிலும் பார்க்க பல மடங்கு வலிமையுள்ள எதிரிக்கு மூக்குடைக்கக் கூடிய வகையில் தன் வலிமையை வைத்திருந்தால் மோதல் தவிர்ப்பு நிலையைத் தான் அந்த வலிமை மிக்க எதிரி விரும்ப மாட்டான். 1971-ம் ஆண்டு நடந்த பங்களாதேச விடுதலைப் போரின் போது இந்தியாவிற்கு எதிராகப் போர் தொடுக்க தனது நேச நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை ஏற்று பிரித்தானியா தனது விமானம் தாங்கிக் கப்பலை இந்து மாக்கடலை நோக்கி நகர்த்தியபோது இரசிய நீர்மூழ்கிக் கப்பல்கள் அதை இடைமறித்தன. பிரித்தானியக் கடற்படை வலிமை மிக்கதாக இருந்தும் ஒரு மோதலைத் தவிர்ப்பதற்காக அது பின்வாங்கியது.

இத்லிப் தீர்மானிக்கும்

வர்த்தக முக்கியத்துவம், வரலாற்ரு முக்கியத்துவம், படைத்துறை முக்கியத்துவம் போன்றவை மிக்க மத்திய தரைகடலில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதைப் பற்றி தீர்மானிப்பது எந்த முக்கியத்துவமும் இல்லாத இத்லிப் என்னும் சிரிய மாகாணமாக இப்போது திகழ்கின்றது. சிரியாவில் தனக்கு என ஒரு பிடி இல்லாத அதாவது அரசுறவியல் நெம்பு கோல் இல்லாத அமெரிக்காவிற்கு கிடைத்துள்ள துரும்பு அல்லது துருப்பு வேதியியல் குண்டுத்தாக்குதல். வேதியியல் தாக்குதல் இல்லாமல் இதிலிப்பை சிரியாவாலும் இரசியாவாலும் கைப்பற்ற முடியாது என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்து  கொண்டுள்ளது. அதனால் தன் கால் நகர்வுகளுக்கு அது காத்திருக்கின்றது.

மோதல் தவிர்பிற்காக சில விட்டுக்கொடுபுக்களை வலிமை மிக்க நாடுகள் செய்யும் நிலை இருப்பது இரசியாவிற்கு சாதகமான ஒன்றே. மத்தியதரைக்கடலில் இரசியா ஒரு காத்திரமான படையணியை வைத்திருந்தால் அதனுடன் மோதலை தவிர்க்கவே வலிமை மிக்க நாடுகள் கூட விரும்பும். அப்படிப்பட்ட நிலையில் இரசியாவால் மத்திய தரைக்கடலில் தனக்கு உரிய இடத்தைப் பெற்றுக் கொள்ளலாம். சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட்டால் இரசியாவின் சாதக நிலை இரட்டிப்பாகும்.

2018 செப்டம்பர் மாதம் 4-ம் திகதி சிரியாவின் இத்லிப் பிராந்தியத்தில் உள்ள தீவிரவாதிகளின் நிலைகள் மீது இரசியப்படைகள் தாக்குதலை ஆரம்பித்தன. இது ஒரு இரத்தக் களரி மிக்கதாக அமையப் போகும் போரின் ஆரம்பமாகும். ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியப் பிரதேசங்களை மீட்ட பின்னர் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இரு பெரும் பிரதேசங்கள் இருக்கின்றன. ஒன்று இத்லிப் மாகாணம். மற்றது குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ரொஜாவா பிரதேசம். ரொஜாவ என்பது குர்திஷ் மக்கள் தமது நிலப்பரப்பிற்கு வைத்த பெயர். அங்கு அவர்கள் தமது அரசை The Democratic Federation of Northern Syria என அழைக்கின்றனர்.

பீப்பாய் குண்டுகள் (barrel bombs)

2018 செப்டம்பர் 7-ம் திகதி ஈரானில் சிரியா தொடர்பாக ஒரு சந்திப்பு நடந்தது அதில் ஈரான், இரசியா, துருக்கி, சிரியா ஆகிய நாடுகள் கலந்து கொண்டன. சிரிய அதிபர் அங்கு செல்லவில்லை. புட்டீன், எர்டோகான், ரௌஹானி ஆகியோர் கலந்து கொண்டனர். இத்லிப்பில் தாக்குதல் செய்யாமல் பேச்சு வார்த்தை நடத்தும் படி துருக்கிய அதிபர் எர்டோகான் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 2018 செப்டம்பர் 9-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரசிய மற்றும் சிரிய விமானப்படைகள் இத்லிப்பில் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின. வெடி பொருட்களும் சிதறு குண்டுகளும்(shrapnel) நிறைந்த பீப்பாய் குண்டுகள் (barrel bombs) அங்கு வீசப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கத் தொண்டு நிறுவனமொன்று இரண்டு மருத்துவ மனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டதாகச் சொல்கின்றது.

இத்லிப் மாகாணம்

இத்லிப் மூன்று மில்லியன் மக்களைக் கொண்ட இத்லிப் மாகாணத்தில் துருக்கி ஆதரவு போராளி அமைப்புக்கள், இரசியா ஆதரவு போராளி அமைப்புக்கள், இரசியாவில் பிரிவினை கோரிப் போராடும் செஸ்னிய இஸ்லாமியப் போராளி அமைப்பு, சீனாவில் தனி நாட்டுக்காகப் போராடும் உய்குர் இஸ்லாமியப் போராளிக் குழுவான தேர்க்கிஸ்த்தான் இஸ்லாமியக் கட்சி என பலதரப்பட்ட அமைப்புகள் இயங்குகின்றன. மொத்தம் எழுபதாயிரம் போராளிகள் அங்கு நிலைகொண்டுள்ளனர். இரசியாவின் படைத்தளம் அமைந்துள்ள லதக்கியா மாகாணத்திற்கு அண்மையில் இதிலிப் மாகாணம் இருக்கின்றது. இத்லிப்பில் இருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் பல தடவைகள் இரசியப் படை நிலைகள் மீது தாக்குதல் முயற்ச்சிகள் மேற்க்கொள்ளப்பட்டன. லதக்கியாவில் இரசியப் படையினர் நிம்மதியாக நிலை கொள்ள இத்லிமப் மாகாணம் தீவிரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

சிக்கலான இத்லிப்

உய்குர் இஸ்லாமியப் போராளிக் குழுவான தேர்க்கிஸ்த்தான் இஸ்லாமியக் கட்சி சிரியாவில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கின்றது. அத்துடன் துருக்கிய உளவுத்துறையுடனும் நெருங்கிய தொடர்பைப் பேணுகின்றது. ஆனால் துருக்கி ஆதரவு குழுக்கள் சில இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்திய போது அது துருக்கி ஆதரவுக் குழுக்களுக்கு எதிராகப் போராடி இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களைப் பாதுகாத்தது. அது பாதுகாத்த அமைப்புக்களில் ஹயட் தஹ்ரிர் அல் ஷாம் முக்கியமானது. ஐ எஸ்ஸின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை மீட்பதற்கு போர் நடந்த போது இரசியா தனது ஆதரவுக் குழுக்களை இத்லில் மாகாணத்திற்கு அனுப்பி வைத்தது. இப்படிப் பட்ட பல ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட போராளி அமைப்புக்களை வைத்துப் பார்க்கும் போது சிக்கலே உன் பெயர் சிரியப் பிரச்சனையா என எண்ணத் தோன்றும். அஹ்ரர் அல் ஷாம் அமைப்பும் நௌர்டீன் அல் ஜென்கி அமைப்பும் இணந்து சிரிய விடுதலைப்படை அமைப்பு உருவாக்கப்பட்டது.

மதவாத ஆட்சி வேண்டும் அமைப்புக்கள்

ஹயட் தஹ்ரிர் அல் ஷாம் (Hay’et Tahrir al-Sham (HTS) ) என்பது நஸ்ரா முன்னணியில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு போராளி அமைப்பு. நஸ்ரா முன்னணி அல் கெய்தாவின் கிளை அமைப்பு. தஹ்ரிர் அல் ஷாமும் துருக்கி ஆதரவு சிரிய விடுதலைப் படையும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை. தஹ்ரிர் அல் ஷாம் சிரியாவில் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையுடைய அமைப்பு. இந்த அமைப்பை அமெரிக்கா துருக்கி உட்படப் பல நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. அபு மொஹம்மட் அல் கொலானி தலைமை தாங்கும் இந்த அமைப்புடன் துருக்கிய உளவுத்துறை தொடர்புகளை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. துருக்கியின் தாளத்து ஆட அது மறுத்துவிட்டது. துருக்கியை ஒட்டிய இத்லிப்பின் பகுதிகளையும் இத்லிப் மாகாணத்தின் தலைநகரான பப் அல் ஹவாவைத் தஹ்ரிர் அல் ஷாம் அமைப்பு தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றது. இத்லிப்பில் அதிக நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இந்த அமைப்பே. அசாதினதும் இரசியாவினதும் படைகள் இத்லிப்பைக் கைப்பற்றாமல் இருப்பதற்கு தஹ்ரிர் அல் ஷாம் அமைப்பைக் கலைத்து விட்டு அதன் போராளிகள் துருக்கியுடன் நெருக்கமான தேசிய விடுதலைப்படையில் இணைவேண்டும் என்ற வேண்டுகோளையும் தஹ்ரிர் அமைப்பு நிராகரித்து விட்டது. தஹ்ரிர் அமைப்பில் உள்ள கரும்போக்காளர்கள் அதன் தலைவர் அபு மொஹம்மட் அல் கொலானி துருக்கியின் கருவியாக மாறுகின்றார் எனக் குற்றம் சாட்டியதும் உண்டு. சிரியாவில் உள்ள் அல் கெய்தா தலைவர்களும் தஹ்ரிர் அல் ஷாம் அமைப்பின் தலைமை தன் தத்துவார்த்த நிலைகளில் இருந்து விலகிவிட்டதாகக் குற்றம் சுமத்தினர். ஆனால் மிக உறுதியான் நிலைப்பாட்டில் இருக்கும் துருக்கியை எதிர்த்துக் கொண்டு துருக்கியின் எல்லையில் நிலை கொண்டுள்ள அமைப்புக்குத் தலைமை தாங்குவது இலகுவான செயல் அல்ல. இந்த நிலையில் இத்லிப்பின் எதிர்காலம் குறித்து துருக்கி ஒரு புறம் தஹ்ரிர் அல் ஷாம் அமைப்புடனும் மறுபுறம் இரசியாவுடனும் தொடர் பேச்சு வார்த்தையில் சில மாதங்களாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன. தஹ்ரிர் அல் ஷாம் அமைப்பைக் கலைக்க முடியாது என அதன் தலைவர் துருக்கிக்கு 2018 ஓகஸ்ட் 28-ம் திகதி தெரிவித்தார்

இஸ்ரேல் சும்மா விட்டு வைக்குமா?

2011-ம் ஆண்டு சிரியாவில் மக்கள் கிளர்ச்சி செய்யத் தொடங்கியதில் இருந்தே இஸ்ரேல் பஷார் அல் அசாத் பதவியில் இருந்து விலக்கப்படுவதை விரும்பவில்லை. 12இற்கு மேற்பட்ட போராளிக்குழுக்களுக்கு இஸ்ரேல் பலவகைகளில் உதவி செய்கின்றது. சில அமைப்பின் போராளிகளுக்கு மாதம் 75 டொலர்களை ஊதியமாகவும் இஸ்ரேல் வழங்குகின்றது. இஸ்ரேல் சில போராளி அமைப்புக்களுக்கு assault rifles, machine guns, mortar launchers and transport vehicles போன்றவற்றை வழங்குவதுடன். கறுப்புச் சந்தையில் படைக்கலன்கள் வாங்க நிதி உதவியும் செய்கின்றது. இஸ்ரேல் உதவி செய்யும் குழுக்கள் ஈரானிற்கு ஆதரவான போராளி அமைப்புக்கள் ஈரானுக்கு ஆதரவான குழுக்களை கோலான் குன்றுப்பக்கம் வராமல் பார்த்து கொள்வதை தடுக்கின்றன.

குர்திஷ் மக்களை வெறுக்கும் துருக்கி

இஸ்லாமிய சகோதரதுவ அமைப்புடன் துருக்கி நெருங்கிய உறவை வைத்திருக்கின்றது. அதனது ஆதரவு பெற்ற NLF எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய விடுதலை முன்னணிக்கு துருக்கி பல உதவிகளைச் செய்தது. அத்துடன் அஹ்ரர் அல் ஷாம், நௌருடீன் அல் ஜெங்கி படையணி, பல்லக் அல் ஷாம், ஜைஸ் அல் அஹ்ரர், உட்பட பல போராளி அமைப்புக்களைக் கொண்ட சுதந்திர சிரியப்படை(Free Syriam Army) துருக்கியின் ஆதரவு பெற்று சிரியாவில் இயங்கி வருகின்றது. அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து தொலைப்பதில் தீவிரமாக இருக்கும் சுதந்திர சிரியப்படை குர்திஷ் போராளிகளுக்கு எதிரான அமைப்புமாகும். சிரியாவிலோ ஈராக்கிலோ குர்திஷ் மக்களுக்கு என ஒரு கட்டுப்பாட்டுப் பிராந்தியம் இருக்கக் கூடாது என்பது துருக்கியின் மிகத் தீவிரமான நிலைப்பாடாகும். அத்துடன் குர்திஷ் மக்கள் வாழும் சிரியாவினதும் ஈராக்கினதும் வட பகுதிப் பிராந்தியங்கள் தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும் என்பது துருக்கி முதலாம் உலகப் போர் முடிவடைந்த போதில் இருந்தே விருப்பமுடையதாக இருக்கின்றது.

இத்லிப்பில் வேதியியல் தாக்குதல் நடக்குமா?

இத்லிப் நகரை எப்படி மீட்டெடுப்பது என்பது தொடர்பாக சிரியா, இரசியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் கடந்த பல வாரங்களாகப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தன. இத்லிப்பின் அஃப்ரின் நகரையும் அல் பப் நகரையும் குர்திஷ் போராளிகள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்கள். துருக்கிப் படைகள் சுதந்திர சிரியப் படை என்னும் போராளிகளின் கூட்டமைப்புடன் இணைந்து அங்கு ஆக்கிரமிப்புச் செய்தபோது குர்திஷ் போராளிகள் பின் வாங்கிச் சென்றனர். அப்போது துருக்கி இத்லிப் மாகணத்தைச் சுற்றிவர பன்னிரண்டு படை அவதானிப்பு நிலையங்கள் என்னும் பெயரில் தனது படையினரை நிலை கொள்ளச் செய்தது. இத்லிப்பை மீளக் கைப்பற்ற வேண்டும் என்ற சிரிய அதிபர் அசாத்தினதும் இரசியாவினதும் திட்டத்தை அது சிக்கலாக்கியது. இரசியா சிரியாவில் குர்திஷ் போராளிகளுடனனான மோதலைத் எப்போதும் தவிர்த்து வந்தது. சிரியாவின் இத்லிப் பிராந்தியத்தில் போலியான வேதியியல் தாக்குதல் நடத்த வெளிநாடுகளில் இருந்து நிபுணர்கள் வந்துள்ளனர் என இரசியப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

இக்கட்டான நிலையில் சிரியா

இத்லிப்பில் நிலைகொண்டுள்ள துருக்கியப் படைகள்,  துருக்கி ஆதரவுப் படைகள், அல் கெய்தா ஆதரவு அமைப்புக்கள் போன்றவற்றை வெற்றி கொள்ள பெரும் படையணிகளை களமிறக்க வேண்டியிருக்கும். பெரும் இழப்புக்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் ஏற்கனவே எதிரி அமைப்புக்களிடமிருந்து கைப்பற்றிய நிலப்பரப்புக்களை இழக்க வேண்டியிருக்கலாம். தடை செய்யப்பட்ட படைக்கலன்களை பாவிக்க வேண்டிய சூழல் கூட உருவாகலாம். வேதியியல் குண்டுகள் பாவித்தால் தாக்குதல் செய்வோம் என அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இக்கட்டான நிலையில் இரசியா

துருக்கியின் வேண்டுகோளை நிராகரித்து  ஹயட் தஹ்ரீர் அல் ஷாம் {Hay’et Tahrir al-Sham (HTS)} அமைப்பு சரணடைய மறுத்த நிலையில் இரசியா அதை இலக்கு வைத்து தனது தாக்குதல்களை 20148 செப்டம்பர் 04-ம் திகதி ஆரம்பித்தது. இரசியாவிற்கு சிரியாவின் முழுப்பகுதியையும் அதிபர் பஷார் அல் அசாத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதும் மத்திய தரைக்கடலில் தனது ஆதிக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதும் முதன்மை நோக்கங்களாகும். அத்துடன் இரசியாவுடன் உறவை அதிகரித்து வரும் துருக்கியைப் பகைக்கக் கூடாது என்பதிலும் இரசியா கவனமாக இருக்கின்றது. அமெரிக்காவுடனான துருக்கியின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் துருக்கி இரசியாவைப் பகைத்தால் அது  மீண்டும் அமெரிக்காவுடன் நெருக்கமடையும் என்பதையும் இரசியா அறியும். துருக்கி மேற்கு நாடுகளின் நட்பை ஒரு போதும் இழக்காது என இரசியா நம்பினால் மட்டுமே இதிலிப்பைக் கைப்பற்றும் அதிபர் அசாத்தின் முயற்ச்சிக்கு இரசியா முழுமையான ஆதரவை வழங்கும். இரசியா என்னதான் ஆதரவு வழங்கினாலும் அதிபர் பஷார் அல் அசாத் இரசியாவின் முழுமையாக சொற்படி கேட்பதில்லை.

இக்கட்டான நிலையில் துருக்கி

தன்னுடைய பிரதேசமாக துருக்கி கருதும் அல்லது கனவு காணும் இத்லிப்பில் தனக்கு சார்பான போராளிக் குழுக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தன்மீது நடக்கும் தாக்குதல் என துருக்கி இரசியாவிடமும் சிரியாவிடமும் தெரிவித்துள்ளது. ஆனால் இரசியாவும் சிரியாவும் இத்லிப்பைக் கைப்பற்றுவதில் உறுதியாக உள்ளன. 2011இல் சிரிய உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து 3.5மில்லியன் சிரிய மக்கள் துருக்கியில் தஞ்சமடைந்துள்ளனர். சிரியாவில் அமைதி நிலை திரும்பினால் மட்டுமே அவர்கள் நாடு திரும்புவார்கள். இக்கட்டான நிலையில் இருக்கும் துருக்கியப் பொருளாதாரத்திற்கு சிரியாவில் அமைதி திரும்புதல் அவசியம். அல் கெய்தாவிற்கும் அதன் ஆதரவு பெற்ற மற்ற அமைப்புக்களுக்கும் துருக்கிய மக்களிடையே பரவலான ஆதரவு உள்ளது. அவர்கள் இத்லிப்பில் கொன்று குவிப்பது துருக்கிய ஆட்சியாளர் மீது மக்களுக்கு வெறுப்பை அதிகரிக்கும். இத்லிப் மீது தாக்குதல் செய்யப்பட்டால் அங்கிருந்து மேலும் பெருந்தொகையான மக்கள் துருக்கியில் தஞ்சம் புக வாய்ப்புண்டு. அவர்களுடன் தீவிர்வாதிகளும் துருக்கி போய்ச் சேரலாம். துருக்கியில் இருக்கும் அமெரிக்கப் படைத்தளம் அமெரிக்காவிற்கு எதிராக துருக்கி பாவிக்கும் துருப்புச் சீட்டு. ஆனால் அமெரிக்கா இப்போது துருக்கியின் போட்டிய் நாடாகிய கிரேக்கத்திற்கு தனது படைத்தளத்தை மாற்றும் திட்டத்துடன் இருக்கின்றது.

இக்கட்டான நிலையில் அமெரிக்கா

2016-ம் ஆண்டு இத்லிப்பின் மூன்று அமைப்புக்கள் இணைந்து இதிலிப் விடுதலைப்படை என்ற அமெரிக்க ஆதரவு அமைப்பை உருவாக்கின. அமெரிக்காவின் ஐ எஸ் அமைப்பிற்கு எதிரான போரில் பங்காற்றின. அது போன்ற அமெரிக்க ஆதரவு குழுக்களை காக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவிற்கு உண்டு எனச் சொல்ல முடியாது. இது போன்ற குழுக்களை தனக்குத் தேவையான போது பாவித்து விட்டு காலைவாருவது அமெரிக்காவைப் பொறுத்தவரை சாதாரணம். ஆனால் இத்லிப்பை சிரிய அரச படைகள் கைப்பற்றிய பின்னர் அவற்றின் அடுத்த இலக்கு ரக்கா மாகாணம் உட்பட்ட குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ரொஜாவா பிரதேசமாகும். அங்கு ஐ எஸ் அமைப்பிற்கு எதிரான படை நடவடிக்கைகளை நெறிப்படுத்தவும் போராளிகளுக்குப் பயிற்ச்சி அளிக்கவும் என இரண்டாயிரம் படை நிபுணர்கள் நிலை கொண்டுள்ளனர். அவர்கள் வெளியேற வேண்டிய நிலை உருவாகும். அதன் பின்னர் சிரியாவில் அமெரிக்காவிற்கு என எந்த ஒரு பிடியும் இருக்காது. இத்லிப் பிரதேசத்தில் உள்ள அல் கெய்தா ஆதரவுக் குழுக்களுடனும் அமெரிக்காவிற்கு இரகசியத் தொடர்புகள் உண்டு. இனி உலகின் எந்த ஒரு மூலையிலும் எந்த ஒரு போராளி அமைப்புக்களும் அமெரிக்காவை நம்பாத நிலை உருவாகலாம்.

இக்கட்டான நிலையில் ஈரான்

சிரியாவிலும் ஈராக்கிலும் ஈரான் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக செய்த நடவடிக்கையால் ஈரானில் வாழும் குர்திஷ் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். அவர்களை அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ ஈரானுக்கு எதிராகத் திருப்பலாம்.

துருக்கி தனது மூக்கைப் பாதுகாப்பதற்கு அல் கெய்தா ஆதரவு பெற்ற படைக்குழுக்களுக்கு படைக்கலன்கள் வழங்கினால் இதிலிப் பெரும் போராக மாறும். அது மோசமான இரத்தக் களரியாக அமையும்.

அமெரிக்காவுடன் பல துறைகளில் முரண்படும் நேட்டோ உறுப்பு நாடான துருக்கி, நேட்டோவில் இணைய முயலும் இரசியக் கவச நாடுகளான உக்ரேனும் ஜோர்ஜியாவும், தென் அமெரிக்காவரை தன் பொருளாதார ஆதிக்கத்தை விரிவாக்க முயலும் சீனா, சீனாவுடன் படைத்துறை ஒத்துழைப்பை அதிகரிக்கும் இரசியா, அமெரிக்காவுடன் படைத்துறை ஒத்துழைப்பை அதிகரிக்கும் இந்தியா, தன் படைவலுவை அதிகரித்துக் கொண்டிருக்கும் ஜப்பான், தமது பாதுகாப்பு அமெரிக்காவில் தொடர்ந்து தங்கியிருக்க முடியுமா எனச் சிந்திக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் என பல வழிகளிலும் பன்னாட்டு உறவுகள் மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன. அதற்கு ஏற்ப நாடுகள் தமது படைத்துறையை வலிமையாக்கிக் கொண்டிருக்கின்றன.

 

மாற்றம் தொடரும்

நேட்டோ தேவையற்ற என்ற கருத்துடன் அரசியலுக்கு வந்த டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் அதன் உறுப்பு நாடுகள் மீது கடுமையான தாக்குதல்களைச் செய்கின்றார். ஐரோப்பிய ஒன்றியம் தனது நாணயத்தின் பெறுமதியை வேண்டுமென்றே திரிபு படுத்துகின்றது என்கின்றார். உலக நாடுகள் இணைந்து செய்த சூழல் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்குகின்றார். ஜேர்மனியுடனும் மற்ற வல்லரசு நாடுகளுடனும் இணைந்து ஈரானுடன் செய்த ஒப்பந்தத்தை ஒரு தலைப்பட்சமாக இரத்துச் செய்கின்றார். உலக வர்த்தகத்தைக் குழப்புகின்றார். டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளை இட்டுக் கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் இப்படி ஒரு நண்பன் எமக்கு இருக்கையில் எமக்கு எதிரிகள் தேவையில்லை என்றார். அமெரிக்காவே முன்னின்று உருவாக்கிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட உலக ஒழுங்கை டிரம்ப் நிர்மூலம் செய்கின்றார் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் டிரம்ப் என்பவர் ஒரு தனிப்பட்ட மனிதர். அவர் நான்கு ஆண்டுகள் மட்டும் பதவியில் இருந்து விட்டுப் போய்விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினரிடையே டிரம்பிற்கு 90 விழுக்காடு ஆதரவு இருக்கும் போது டிரம்ப் தனிமனிதரல்லர் என்பது உறுதியாகின்றது. டிரம்ப்வாதம் என ஒன்று உருவாகிவிட்டது. டிரம்ப் போனாலும் அது தொடர்ந்து இருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் மார்கரட் தட்சர் ஆட்சியில் இருக்கும்போது அவரோடு அவரது தட்சர்வாதம் போய்விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பாராத இடமான தொழிற்கட்சியில் இருந்து ரொனி பிளேயர் மோசமான தட்சர்வாதியாக உருவாகினார். அது போலவே டிரம்பிற்கும் யாராவது மோசமான வாரிசு வரமாட்டார் சொல்ல முடியாது என்ற நிலையில் உலக ஒழுங்கில் டிரம்பிற்கு பின்னர் ஏற்பட்ட மாற்றம் மாற்ற முடியாமல் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாறிய நிலைமை

1991இன் இறுதியில் நடந்த சோவித் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மேற்கு நாடுகள் எனப்படும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் தமது படைத்துறைச் செலவுகளைக் குறைத்தன. பின்னர் இரசியா 2014-ம் ஆண்டு இரசியா கிறிமியாவை தன்னுடன் இணைத்துடன் சிரியாவில் மேற்கு நாடுகள் தமது படைத்துறைச் செலவை அதிகரித்தன. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் பாதுகாப்புச் செலவு அதிகரிப்பில் மந்த நிலை உருவானது. தற்போது மேற்கு நாடுகளின் பொருளாதாரச் சூழல் சீரடைய தொடங்கிய நிலையில் மேற்கு நாடுகளில் பிரபல்யவாதமும் தேசியவாதமும் தலை தூக்கியுள்ள நிலையில் மேற்கு நாடுகளிடையேயான ஒற்றுமை கேள்விக்குறியாகியுள்ளது.

மாறுமா ஜேர்மனி? அணுக்குண்டு தயாரிக்குமா?

அண்மையில் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலர் ஹென்றி கிஸ்ஸிஞ்சர் ஐரோப்பியரிடையே அமெரிக்கா மீதான வெறுப்பு பரவலாக இருந்தது. ஆனால் மேற்கு ஐரோப்பியர்கள் இப்போது அமெரிக்கா இல்லாத ஐரோப்பாவை இட்டு அச்சமடைந்துள்ளனர். 1940களில் ஐரோப்பியத் தலவர்கள் தமது பதையை இட்டு தெளிவாக இருந்தனர். இப்போது உள்ள தலைவர்கள் எப்படிப் பிரச்சனைகளைத் தவிர்ப்பது என்பதில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். கிஸ்ஸிஞ்சரின் கருத்து அமெரிக்க உலக ஆதிக்கத்தை மற்ற  நாடுகள் ஏற்று அதற்கு ஏற்பட நடக்க வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டதாக இருந்தாலும் தற்போதைய மேற்கு ஐரோப்பியத் தலைவர்கள் தமது பிராந்தியத்தை வழி நடத்தக் கூடிய சிந்தனை அற்றவர்களாக உள்ளனர் என்பது உண்மை. நேட்டோ நாடுகளைப் பொறுத்தவரை இரசியாவின் அச்சுறுத்தலுக்கு அதிகம் உள்ளாகியுள்ள நாடுகளில் ஜேர்மனியும் ஒன்றாகும். ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டிருப்பதாலும், உலகின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி நாடாக இருப்பதாலும் கடந்த காலம் போர் நிறைந்ததாக இருப்பதாலும் ஜேர்மனி தனது பாதுகாப்பிற்கு மற்ற நாடுகளை நம்பி இருக்க முடியாது. ஜேர்மனி தனது பாதுகாப்பிற்கான உடனடி நடவடிக்கையாக அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. F-35, F-15. F/A-18 ஆகியவற்றை வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இச் செய்தி வந்ததும் ஜேர்மனி அணுக்குண்டுகளை உற்பத்தி செய்யப்போகின்றது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. 1954-ம் ஆண்டு ஜேர்மனி மற்ற நட்பு நாடுகளான, அமெரிக்கா, பிரித்தானியா. பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுடன் செய்து கொண்ட பரிஸ் உடன்படிக்கையின்படி ஜேர்மனி அணுக்குண்டு உற்பத்தி செய்வதில்லை என ஒத்துக்கொள்ளப்பட்டது. தற்போது உலகிலேயே அதிக அளவிலும் உயர்ந்த தரத்திலும் யூரேனியத்தைப் பதன் படுத்தும் ஜேர்மனியால் அணுக்குண்டு தயாரிக்கக் கூடிய தொழில்நுட்ப அறிவு உண்டு. இரசியாவின் அணுக்குண்டுகளில் இருந்து ஜேர்மனிக்கான கவசத்தை அமெரிக்கா வழங்காவிடில் ஜேர்மனி அணுக்குண்டு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு ஜேர்மனியர்கள் மத்தியில் ஆதரவு அதிகரிக்கின்றது.

புதுப்பிக்கும் அமெரிக்கா

அமெரிக்காவின் போர் விமானங்களில் மிகவும் பிரபலமானவை அதனது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களான F-22 வும் F-35வும் ஆகும். F-22 பல போர்முனைகளில் வெற்றிகரமாகச் செயற்பட்டுள்ளது. அது எதிரிகளின் ரடார்களால் கண்டறிய முடியாத சிறந்த புலப்படா விமானமுமாகும். F-35 போர்களங்களில் இன்னும் பெரிதாகப் பாவிக்கப்படாத புலப்படாப் போர்விமானங்கள். அவை கணினி மயமாக்கப் பட்ட விமானங்களாகும். எதிரி விமானங்கள் F-35ஐ கண்டறிய முன்னர் F-35 எதிரி விமானங்களை கண்டறிந்து அழித்துவிடும். சீனாவினதும் இரசியாவினதும் வான் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கருதும் அமெரிக்கா F-22இன் உடலையும் F-35இன் மூளையையும் கொண்ட புதிய போர்விமானங்களை உருவாக்க அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனமான லொக்கீட் மார்ட்டின் திட்டமிட்டுள்ளது.

மாறுமா இரசிய சீன உறவு?

Vostok 2018, என்னும் பெயரில் 2018 செப்ரம்பர் 11-ம் திகதி முதல் 15-ம் திகதி வரை ஒரு படைப்பயிற்ச்சியைச் செய்யவுள்ளது. Vostok 2018 தமிழில் கிழக்கு-2018 எனப்பொருள்படும். பனிப்போர் முடிவுக்குப் பின்னர் இரசியா செய்யும் மிகப்பெரிய இந்தப் படைபயிற்ச்சியில் சீனாவும் இணையவுள்ளது. இரசியத் தரப்பில் 300,000 படையினரும் ஆயிரம் போர் விமானங்களும் ஈடுபடுத்தப்படவுள்ளன. கடைசியாக இரசியா செய்த பெரும் போர்ப்பயிற்ச்சி 1981-ம் ஆண்டு நடந்தது. சோவியத் ஒன்றிய காலத்தில் நடந்த அப்பயிற்ச்சியில் 150,000 படையினர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டனர். சீன மக்கள் விடுதலைப்படையின் சார்பில் 3200 படையினரும் 30 விமானங்களும் ஈடுபடவுள்ளன. இரசியாவின் தூர கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சுகோல் பயிற்ச்சி நிலையத்தில் இப்படைப்பயிற்ச்சி இடம்பெறவுள்ளது. சிரியப் போரில் 200வகையான படைக்கலன்களையும் கருவிகளையும் பாவித்த இரசியர்களின் அனுபத்தை சீனப்படையினர் நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சீறுமா இரசியா சிரியாவில்?

சிரியாவின் வட பிராந்தியத்தில் குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ரக்கா மற்றும் கசக்கா மாகாணங்களில் அமெரிக்கப்படையினர் இரண்டாயிரம் வரை நிலை கொண்டுள்ளனர். சிரியாவில் வேறு ஒரு வெளிநாட்டுப் படைகளும் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை இரசியா தற்போது எடுத்துள்ளது. சிரிய அரசும் அமெரிக்கப்படைகளை வெளியேறும் படியும் குர்திஷ் போராளிகளை அந்த இரு மாகாணங்களின் கட்டுப்பாட்டை தம்மிடம் ஒப்படிக்கும் படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில் 2018 ஓகஸ்ட் 28-ம் திகதி இரசியாவின் பெரும் கடற்படைப் பிரிவு ஒன்று சிரியாவில் தரையிறங்கியுள்ளது. சிரியாவில் எஞ்சியுள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இத்லிப் மாகாணத்திலும் பெரும் போர் ஒன்று வெடிக்கும் ஆபத்து உள்ளது.

இரசியப் போர்விமானங்களில் செயற்கை விவேகம்

இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமான SU-57 இல் செயற்கை விவேகம் இணைக்கப் படவிருக்கின்றது. பற்பணிப் போர்விமானமான SU-57 ஒரு போர் நிலை என்று வரும் போது முழுக்க முழுக்க கணினிகளின் உதவியுடன் தானாகவே சிந்தித்துச் செயற்படும். SU-57 2019-ம் ஆண்டு இரசியாவில் பணியில் ஈடுபடுத்தப்படும். அதற்கான பயிற்ச்சிப் பறப்புக்கள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்கா வெற்றிகரமாக செய்து முடித்த செங்குத்தாக விமானங்கள் தரையில் இருந்து (உலங்கு வானூர்தி போல்) பறந்து செல்லும் தொழில்நுட்பத்தை இரசியாவும் உருவக்கிக் கொண்டிருக்கின்றது. இத்தொழில் நுட்பம் விமானம் தாங்கிக் கப்பலில் பாவிக்கும் விமானங்களில் இணைக்கப்படவுள்ளன.

 

குழவிப் போர் முறைமை (Swarm Warfare)

இதுவரை காலமும் குழவிப் போர் முறைமை என்பது சமச்சீரற்ற போரில் (asymmetric warfare) பிரயோகிக்கப்படுகின்ற ஒன்றாக இருந்தது. அதில் வலிமை மிக்க எதியின் மீது வலிமை குறைந்த படையினர் பெருமளவில் திடீர் அதிரடித் தாக்குதலை நடத்துவதாகும். எதியில் பதில் தாக்குதல் பல படையினர் கொல்லப்பட்டாலும் ஒரு சில படையாவது எதிரியின் இல்லைக்கில் சேதத்தை விளைவிப்பது இதன் அடிப்படை உத்தியாகும். உதாரணத்திற்கு ஒரு பெரிய கப்பலை நோக்கிப் பல சிறுபடகுகளில் தாக்குதல் செய்வதாகும். பெரும் கப்பலின் தாக்குதலால் பல படகுகள் அழிக்கப்பட்டாலும் ஒரு படகாவது வெடிபொருட்களுடன் சென்று எதிரியின் பெரிய கப்பல் மீது மோதி அழிக்கும். தற்போது குழவிப் போர் முறைமை உயர் தொழில்நுட்பப் போரில் கையாளப்படுகின்றது. அமெரிக்காவின் மிகப் புதிய விமானங்களான F-35 போர் விமானங்கள் தமக்கிடையேயான தொடர்பாடல்களைச் சிறப்பாகச் செயற்படக்கூடியன. அத்துடன் எதிரியின் விமானங்கள், உணரிகள், ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் F-35 போர் விமானங்களை இனம் காணமுன்னதாக F-35 எதிரியை இனம் கண்டு தாக்குதல் தொடுக்கத் தொடங்கிவிடும். பல F-35 போர் விமானங்கள் கூட்டாக தாக்குதல் செய்யக் கூடியவை. அவற்றை இனம் காண்பது எதிரிக்குக் கடினம். பல F-35 ஒன்றாகப் பறக்கும்போது ஒரு விமானம் எதிரியின் வானிலோ தரையிலோ கடலிசோ உள்ள இலக்கை உணர்ந்து கொண்டால் அது அது தான் தாக்குதல் செய்யாமல் தன்னுடன் இணைந்து பறக்கும் விமானத்தில் உள்ள ஏவுகணையை எதிரியின் மீது வீசும். இச் செயற்பாடு மனித செயற்பாடின்றி செயற்கை விவேகத்தின் மூலம் விமானங்கள் தாமாகவே செயற்பட்டு எதிரியின் இலக்கின் மீது தாக்குதல் நடக்கும். இந்த வகையில் அமெரிக்காவின் F-35 செயற்படும் போது இரசியாவின் SU-35 போர்விமானங்களையும் S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் அழித்துவிடும் வாய்ப்பு அதிகம் உண்டு.

சீனாவின் நித்திரையைக் குழப்பும் குவாம் தீவு

இது வரை காலமும் தனது வான்பரப்புக்குள் மட்டும் தனது போர்விமானங்களின் பறப்புக்களையும் பயிற்ச்சிகளையும் பெருமளவில் செய்து வந்த சீன வான் படையினர் 2018 ஓகஸ்ட் மாதம் தமது புதிய பெரிய விமானமாகிய H-6Kஐ பன்னாட்டு வான் பரப்பில் பறக்க விட்டனர். இவை அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியவை. பசுபிக் கடலில் உள்ள குவாம் தீவில் இருக்கும் அமெரிக்காவின் படைத்தளத்தை இட்டு சீனா எப்போதும் அதிக கரிசனையுடனேயே இருக்கின்றது. இதுவரை காலமும் அதைக் கருத்தில் கொண்டு சீனா தனது ஏவுகணைகளில் அதிக கவனம் செலுத்தியது. இப்போது வான் படையிலும் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. 2018 ஒகஸ்ட் ஆரம்பத்தில் தைவானிற்கான படைத்துறை உதவிகளை அதிகரிக்கும் சட்டத்தை அமெரிக்கப் பாராளமன்றம் நிறைவேற்றியதும அதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுமதி வழங்கியதும் சீன ஆட்சியாளர்களை கடும் சினத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அந்த சினத்தை சீனா H-6Kஐபோர்விமானங்களின் பறப்புக்கள் மூலம் பகிரங்கமாகவும் வட கொரிய விவகாரத்தில் இரகசியமாகவும் காட்டியுள்ளது. இதனால் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் வட கொரியாவிற்கு செல்லவிருந்த பயணம் இரத்துச் செய்யப்பட்டது. 2018இல் சீனாவின் படைவலு தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 2018 ஓகஸ்ட் மாதம் 16-ம் திகதி வெளிவிட்ட அறிக்கையில் கடந்த மூன்று ஆண்டுகளாக சீனா தனது வானில் இருந்து கடற்பரப்புக்கு செய்யும் தாக்குதல்களின் திறனை அதிகரித்துக் கொண்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பசுபிக் மாக்கடலின் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவினதும் அதன் நட்பு நாடுகளின் படை நிலைகளை இலக்காகக் கொண்டே சீனா இதைச் செய்வதாக அந்த 130பக்க அறிக்கை தெரிவிக்கின்றது.

மாறிவரும் நாடுகளிடையான உறவு மட்டுமல்ல பொருளாதார மற்றும் வர்த்தகப் போட்டிகளையும் படை வலிமையின் பங்கு அதிகரித்துச் செல்வது ஓரு பேரழிவிற்கான ஆபத்தை அதிகரிக்கின்றது.