டிரம்ப் புட்டீன் சந்திப்புப் பற்றிய சிந்தனைகள்

Posted: July 9, 2018 in அமெரிக்கா, இரசியா

இரசியா உக்ரேனின் கிறிமியாவைத் தன்னுடன் இணைத்ததில் இருந்து மோசமடைந்திருக்கும் அமெரிக்க இரசிய உறவை டொனால்ட் டிரம்ப்பால் சீராக்க முடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இரசியாவுடன் சிறந்த உறவு உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்த டொனால்ட் டிரம்ப் அவரது வெற்றிக்கு இரசியா உதவியது என்ற குற்றச்சாட்டு வலிமையாக எழுந்ததால் இரசியாவுடனான ஒரு பேச்சு வார்த்தையின் போது விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய முடியாத நிலைக்கு டிரம்ப் தள்ளப்பட்டார். ஜூலை 16-ம் திகதி டொனால்ட் டிரம்பும் விளடிமீர் புட்டீனும் பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடப்பதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உதவியாளர்களின்றி நேரடிப் பேச்சு வார்த்தை

இதற்கு முன்பு பன்னாட்டு மாநாடுகள் நடக்குமிடங்களில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் முதற்தடவையாக அதிகார பூர்வமாகச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். இச் சந்திப்பு வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன்னுடன் செய்த சந்திப்பை ஒத்ததாக இருக்கின்றது. முதலில் இரு தலைவர்களும் அதிகாரிகளின் உதவியின்றி மொழிபெயர்ப்பாளர்களை மட்டும் உடன் வைத்துக் கொண்டு உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அதிகாரிகளையும் வைத்துக் கொண்டு உரையாடல் நடை பெறும். டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக முன்னர் இரசிய விலைமாதர்களுடன் வைத்திருந்த உறவுகள் தொடர்பான படங்களையும் தகவல்களையும் வைத்து புட்டீன் இரகசியமாக டிரம்பை மிரட்டி தனது தேவைகளுக்குப் பணிய வைக்கலாம் எனவும் சில ஆய்வாளர்கள் கருத்து வெளியிடுகின்றனர். இருவரும் இரகசியமாக வெள்ளைத்தேசியவாதத்தை முன்னெடுப்பவர்கள் என்பது மட்டுமல்ல தாராண்மைவாதத்தையும் கடுமையாக எதிர்ப்பவர்கள். டிரம்ப் தனது இரசிய விசுவாசத்தை G-7 நாடுகளின் மாநாட்டில் உரையாற்றும் போது அந்த அமைப்பில் இரசியாவை மீண்டும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

பின்லாந்துமயமாதலை அமெரிக்காவும் செய்யுமா?

இரசியா மன்னர் ஆட்சியின் கீழ் இருந்த போது இரசியப் பேரரசின் ஓர் உறுப்பு நாடாக பின்லாந்து இருந்தது. பொதுவுடமைப் புரட்சியின் பின்னர் தேசங்களின் தன்னாட்சி அதிகாரங்களுக்கு மதிப்புக் கொடுத்த லெனின் பின்லாந்தைத் தனிநாடாக அனுமதித்தார். அன்றிலிருந்து பின்லாந்து இரசியாவிற்கு அச்சப்படும் ஒரு நாடாகவும் அதனுடன் உறவைப் பேணி அதன் நலன்களுக்கு எதிராகச் செயற்படாத நாடாகவும் இருந்து வருகின்றது. அரசுறவியலில் தான் அச்சப்படும் எதிரி நாட்டுக்கு இசைவாக ஒரு நாடு நடப்பதை பின்லாந்துமயமாதல் (Finlandization) என அழைப்பர். பின்லாந்தில் இரசிய அதிபரைச் சந்திக்கும் டிரம்பும் அமெரிக்காவை பின்லாந்துமயமாக்குவார் என டிரம்புக்கு எதிராக எழுதும் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிடுகின்றனர். 2016-ம் ஆண்டு டிரம்ப் தனது தேர்தல் பரப்புரையின் போதே இரசியா உக்ரேனை ஆக்கிரமித்ததை நியாயப்படுத்த முயற்சித்திருந்தார். இருவர்களும் சந்திக்கும் போது உக்ரேன் விவகாரத்தால் அமெரிக்கா இரசியா மீது விதித்த பொருளாதாரத் தடை முக்கிய இடம்பெறும். இரசியா தான் இப்போது படைத்துறை அடிப்படையில் மிகவும் வலிமையடைந்துள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளியிட்டு வருகின்றது

இரசியா சென்ற அமெரிக்க ஆளும் கட்சிப் பாராளமன்ற உறுப்பினர்கள்

அமெரிக்கப் பாராளமன்றத்தின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 2018 ஜூலை 3-ம் திகதி இரசியப் பாராளமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தனர். இச்சந்திப்பு வழமையில் இருந்து சற்று மாறு பட்ட ஒன்று என்பது மட்டுமல்ல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் ஜூலை 16-ம் திகதி செய்யவிருக்கும் சந்திப்பிற்கு முன்னோடியாகவும் அமைந்திருந்தது. எதிர்பார்த்திராத இணக்கமான சூழ்நிலை அங்கு நிலவியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூதவை உறுப்பினர் அமெரிக்காவும் இரசியாவும் போட்டியாளர்கள் மட்டுமே எதிராளிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை என இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லாவோவிடம் தெரிவித்தார். அதேவேளை சில இரசியப் பாராளமன்ற உறுப்பினர்கள் டொனால்ட் டிர்ம்ப் தனது தேர்தல் பரப்புரையின் போது உறுதியளித்த இரசியவுடனான உறவைச் சீராக்கல் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற ஏமாற்றத்தைத் தெரிவித்தனர். இரசியா 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டமை தொடர்பாக அமெரிக்காவில் நடக்கும் விசாரணைகளும் முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுகளும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதிக்காமல் இருப்பதில் இரு நாட்டுப் பாராளமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்தினர். அமெரிக்கத் தேர்தலின் போது டிரம்பின் பரப்புரையாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் எனக் குற்றம் சாட்டப்படும் அமெரிக்காவிற்கான அப்போதைய இரசியத் தூதுவர் சேர்கி கிலியாக் தற்போது இரசியப் பாராளமன்றத்தின் மூதவை உறுப்பினராக இருக்கின்றார் இரசியா வந்துள்ள பாராளமற உறுப்பின்ரகளில் பலரை எனக்கு நேரடியாகத் தெரியும் என்றார் அவர். அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் தமக்கு விளடிமீர் புட்டீனைச் சந்திக்க வாய்யளிக்காமல் விட்டதையிட்டு சற்று அதிருப்தியடைந்தனர். மக்களாட்சிக் கட்சியின் பாராளமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் இரசியத் தலையீடு பற்றி குடியரசுர்க் கட்சியினரிலும் பார்க்க அதிக அளவு ஆத்திரமடைந்துள்ளனர். அதே வேளை 2018 நவம்பரில் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியினர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் குடியரசுக் கட்சியினர் மட்டும் சீராக்கும் இரசியாவுடனான உறவு எந்த அளவு நின்று பிடிக்கும் என்பது கேள்விக் குறியே.

புதிய தொடர்பாடல் வழி

அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்களின் இரசியப் பயணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அமெரிக்காவில் பாதுகாப்புத் துறை ஆலோசகர் ஜோன் போல்டன் இரசியா சென்று டிரம்ப்-புட்டீன் சந்திப்புப் பற்றிக் கலந்துரையாடியிருந்தார். சீனாவும் வட கொரியாவும் அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தைகளுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறையை ஓரம் கட்டிவிட்டு நேரடியாக வெள்ளை மாளிகை அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர். அதில் ஜோன் போல்டன் பகிரங்கமாகவும் டிரம்பின் மருமகன் ஜெரார்ட் குஷ்னர் இரகசியமாகவும் பெரும் பங்கு வகித்தனர்.

சிரியாவில் இரசியர்களைப் போட்டுத் தள்ளிய அமெரிக்கா

2018-ம் ஆண்டு மார்ச் மாதம் சிரியாவில் அமெரிக்கப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள Deir Ezzor பிரதேசத்தில் சிரிய அரச படையினரும் இரசியத் தனியார் படையினரும் ஒரு கூட்டுத் தாக்குதலை முன்னறிவித்தல் ஏதுமின்றி மேற்கொண்டனர். அமெரிக்க வான்படையினர் செய்த பதலடித் தாக்குதலால் முன்னூறுக்கும் மேற்பட்ட இரசியத் தனியார் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இதை இரசியா பகிரங்கப்படுத்தவில்லை. 1950-ம் ஆண்டு நடந்த கொரியப் போரின் பின்னர் அதிக அளவிலான இரசியர்களை அமெரிக்கப்படை அங்கு கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கவில்லை.

ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர்

அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையில் பிரச்சனைக்குரிய ஒன்றாக ஈரானும் இருக்கின்றது. இரு நாடுகளும் ஈரான் அணுக்குண்டு உருவாக்குவதை விரும்பவில்லை. ஆனால் ஈரானுடனான ஒப்பந்தத்தை அமெரிக்கா ஒருதலைப் பட்சமாக இரத்துச் செய்ததை இரசியா எதிர்க்கின்றது. ஈரானுக்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை அமெரிக்கா செய்ய வேண்டும் என சவுதி அரேபியாவும் இரகசியமாகத் தூண்டுகின்றன.

மத்திய அமெரிக்கா

சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சியைத் தக்கவைப்பதில் விளடிமீர் புட்டீன் காட்டிய அக்கறையை வெனிசுவேலாவில் நிக்கொலஸ் மதுராவின் ஆட்சியைத் தக்கவைப்பதில் காட்டவில்லை. ஆனால் சிரியாவில் செய்தது போல் வெனிசுவேலாவில் அமெரிக்காவின் நடவடிக்கைகக்ளுக்கு குந்தகம் விளைவிப்பதில் புட்டீன் அக்கறை காட்டுகின்றார். அதனால் சிரியாவிற்கு அனுப்பியது போல் வெனிசுவேலாவிற்கு இரசியப் படைகளை அனுப்பவில்லை. அனுப்பப்போவதுமில்லை. ஆனால் கடந்த ஓராண்டாக டொனால்ட் டிரம்ப் தன் உயர் அதிகாரிகளுடனும் பல உலகத் தலைவர்களுடனும் வெனிசுவேலாவிற்கு அமெரிக்கப் படைகளை அனுப்புவது பற்றி உரையாடிவருகின்றார் மத்திய அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. டிரம்ப்-புட்டீன் சந்திப்பில் வெனிசுவேலா முக்கிய இடம்பெறும்.

கரிசனை கொள்ளும் ஐரோப்பா

இதுவரை காலமும் அமெரிக்காவுடன் இணைந்து இரசியாவை எதிர்த்து வந்த ஐரோப்பிய நாடுகள் தங்களை அமெரிக்காவை முதன்மைப் படுத்தும் கொள்கை கொண்ட டிரம்ப் விற்றுவிடுவாரோ எனக் கரிசனையடைந்துள்ளன. குறிப்பாக உக்ரேனை டிரம்ப் கால்வாருவாரா என்ற கரிசனை அதிகமாக உள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை மீளவும் இரசியாவுடன் இணைக்க வேண்டும் என்ற கொளையுடையவர் புட்டீன். பத்து ஆண்டுகளுக்குமேல் ஆட்சியில் இருக்கும் முன்னாள் இரசிய உளவுத் துறை உயர் அதிகாரியான புட்டீன் ஏமாற்றிவிடுவாரா என்ற கரிசனையும் பலரிடம் உள்ளது. 2018இல் புட்டீன் தேர்தலில் வெற்றி பெற்ற போது அவருக்கு வாழ்த்துச் செய்தை அனுப்ப வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை டிரம்ப்பிற்கு அறிவுரை சொல்லியிருந்தது. அதைப் புறக்கணித்து தனது வாழ்த்தைத் தெரிவித்தவர் டிரம்ப் என்பதையும் ஐரோப்பியர் அறிவர். ஐரோப்பிய ஒன்றியத்தை விரும்பாத டிரம்ப் அதற்கு எதிராகவும் தனது வர்த்தகப் போரை ஆரம்பித்துள்ளார்.

நேட்டோ

டிரம்ப் நேட்டோ என்பது காலவதியான் ஒன்று என்ற கொள்கையுடையவர். டிரம்ப் புட்டீனைச் சந்திப்பதற்கு ஒரு சில நாட்கள் முன்னதாக அதாவது ஜூலை 11-ம் திகதியும் 12-ம் திகதியும் நேட்டோவின் உச்சி மாநாட்டில் புட்டீனைத் திருப்திப்படுத்தும் வகையில் டிரம்ப் செயற்படலாம் எனவும் மேற்கு ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே நோர்வே, ஜேர்மனி, கனடா, பெல்ஜியம் ஆகியவை உட்படப் பல நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு அவற்றின் பாதுகாப்புச் செலவை உயர்த்தும்படி கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுடன் கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் புலனாய்வுக்கான குழு 2016 நடந்த அமெரிக்கத் தேர்தலில் இரசியா தலையிட்டது என்பதை 2018 ஜூலை முதல் வாரத்தில் உறுதி செய்துள்ளது. அதனால புட்டீனால் தேர்தலில் வெற்றி பெறவைக்கப்பட்டவர் என்ற குற்றத்தைச் சுமந்து நிற்கும் டிரம்பால் புட்டீனுக்காக எந்த விட்டுக் கொடுப்பையும் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக புட்டீன் 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இரசியத் தலையீடு தொடர்பான விசாரணையை நிறுத்தும் கோரிக்கையை இரகசியமாக முன்வைக்கலாம். அது ஆளும் குடியரசுக் கட்சிக்குள் பெரும் பிளவை ஏற்படுத்தலாம். உனக்கும் வெற்றி எனக்கும் வெற்றி என்ற நிலையை உருவாக்காமல் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நல்லபடியாக நிறைவேறாது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.